சென்னை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. நம் தாய்மொழியை பாதுகாக்கின்ற அடுத்த கட்ட போரில் பங்கெடுத்துக் கொண்டு நம் மொழியினை பாதுகாக்க வேண்டும்.
மக்களின் இனத்தினை பாதுகாக்க வேண்டும். அந்த கடமையை நாம் செய்ய வேண்டும். இந்தி மொழியின் ஆதிக்கம் பற்றி உங்களுக்கு தெரியாத ஒன்றும் கிடையாது, இந்தி மொழியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்ட பல்வேறு மாநிலங்களில் அவர்களுடைய தாய்மொழி காணாமல் போய் உள்ளது. உதாரணத்திற்கு ராஜஸ்தானின் தாய்மொழி இல்லாமல் போய்விட்டது. ஒடிசாவில் ஒரியா மொழி இல்லாமல் போய்விட்டது. இந்தி மொழியில் அப்படி எதுவும் சிறப்பு இருக்கிறதா? என்று கேட்டால் அப்படி ஒன்றும் கிடையாது. உலகின் சிறப்பான செம்மொழி அந்தஸ்தை பெற்றது தமிழ் மொழி மட்டுமே. இவ்வாறு அவர் பேசினார்.
The post இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்ட பல மாநிலங்களில் தாய்மொழி காணாமல் போய் உள்ளது: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு appeared first on Dinakaran.