சென்னை: மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வாசலில் பெண்கள் கோலமிட்டனர். அவ்வாறு வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட்ட வீடியோவைப் பகிர்ந்து, பாரதிதாசன் வரிகளை மேற்கோள் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தி மொழி குறித்த சர்ச்சை மீண்டும் எழத் தொடங்கியுள்ளது. அதாவது, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பள்ளிக்கல்விக்கான நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.