இஸ்லாமாபாத்: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங்கை பாகிஸ்தான் சிறைபிடித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து பிரதமர் மோடி இல்லத்தில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் மீது அதிரடியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்தது.
மேலும் அட்டாரி – வாகா எல்லை உடனடியாக மூடப்படவும் உத்தரவிடப்பட்டது. பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தியது இந்தியா. சிந்து நதி பகிர்வு ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை அடுத்து இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதர்களுக்கும் ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜெய்சங்கர் விவரிக்க உள்ளார். ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சற்று நேரத்தில் தூதர்களுக்கு விவரிக்க உள்ளார். இந்தியாவின் முடிவுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க உள்ளார்.
இந்நிலையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங்கை பாகிஸ்தான் சிறைபிடித்தது. பாதுகாப்பு படைவீரர் பி.கே.சிங்கிடம் இருந்து துப்பாக்கி, வாக்கி டாக்கி தண்ணீர் பாட்டல் போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். பி.கே.சிங் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரராக 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்சவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது.
The post இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங்கை சிறைபிடித்தது பாகிஸ்தான் appeared first on Dinakaran.