சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜாஸ் பட்லர் மட்டும் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு 44 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசினார்.
இந்திய அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி 3, அக்சர் படேல் 2 விக்கெட்களை வீழ்த்தினர். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய் விக்கெட்களை வீழ்த்தாவிட்டாலும் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். இவர்கள் 3 பேரும் கூட்டாக 12 ஓவர்களை வீசி 67 ரன்களை மட்டுமே வழங்கினர். முன்னதாக தொடக்க ஓவர்களில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். மிதவேகப்பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டியா 42 ரன்களை வாரிக்கொடுத்த நிலையில் 2 விக்கெட் கைப்பற்றினார்.