வாடிகன் சிட்டி: மறைந்த போப் பிரான்சிஸ் உடல் அவரது விருப்பப்படி ரோமில் உள்ள செயின்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக போப் உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேரில் மரியாதை செலுத்தினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல உலக தலைவர்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும் போப் பிரான்சிசுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல் நலக் குறைவால் கடந்த 21ம் தேதி வாடிகனில் காலமானார்.
அவரது உடல் கடந்த 23ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இந்தியா சார்பில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் போப் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 3 நாட்களும் பொதுமக்கள் இரவு பகலாக அஞ்சலி செலுத்திய நிலையில் நேற்று முன்தினம் இரவுடன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில், போப் உடலுக்கு சுமார் 2.5 லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்தியதாக வாடிகன் தகவல் வெளியிட்டது. இதையடுத்து, பாரம்பரிய வழக்கப்படி, போப் பிரான்சிசின் முகம் வெள்ளை துணியால் மூடப்பட்டது. அவரது வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய ஆவணம், அவரது பதவிக்காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பையும் வைக்கப்பட்டு மரப்பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், இறுதிச் சடங்குகள் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் ஐரோப்பிய அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 160க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.
இதுதவிர, ஆயிரக்கணக்கான பொதுமக்களும் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் குவிந்து சிறப்பு திருப்பலியில் பங்கேற்று போப் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, போப் பிரான்சிசின் 12 ஆண்டு கால போப் வாழ்க்கையை குறிப்பிட்டு பேசிய கர்தினால் ஜியோவானி பாட்டிஸ்டா ரே, ‘‘பிரான்சிஸ் மக்களின் போப்பாக வாழ்ந்தார். அனைவரிடமும் திறந்த இதயத்துடன் இருந்தார். புலம்பெயர்ந்தோர் மீது அதிக அக்கறை கொண்டிருந்தார்’’ என கூறியதும் கூட்டத்தில் பலரும் கைதட்டி வரவேற்றனர்.
இதையடுத்து, போப்பின் உடல் வைக்கப்பட்ட மரப்பெட்டி பீட்டர்ஸ் சதுக்கத்தில் இருந்து வாகனத்தில் ஊர்வலமாக ரோம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. சுமார் 6 கிமீ தூரம் நடந்த இந்த வாகன பேரணியின் போது, சாலையின் இருபுறமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து போப் பிரான்சிசை வழியனுப்பி வைத்தனர். போப் பிரான்சிஸ் விருப்பப்படி அவரது உடல் நல்லடக்கத்திற்காக ரோம் நகரின் செயின்ட் மேரி மேஜர் பசிலிக்கா தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு போப் பிரான்சிசின் உடலை புலம்பெயர்ந்தோர், கைதிகள், வீடடற்றவர்கள், 3ம் பாலினத்தவர்கள் என 40 பேர் கொண்ட குழுவினர் வெள்ளை ரோஜா வைத்து வரவேற்றனர்.
பின்னர் போப் பிரான்சிசின் உடல் தேவாலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேவாலய கல்லறையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பொதுவாக போப்களின் உடல் 3 அடுக்கு சவப்பெட்டியில் வைக்கப்படும். ஆனால், போப் என்பது அதிகாரமிக்க நபராக இருக்கக் கூடாது, மக்களோடு மக்களாக பாதிரியராக மட்டுமே இருக்க வேண்டுமென்ற எளிய வாழ்க்கை வாழ்ந்த போப் பிரான்சிசின் உடல் துத்தநாகம் கலந்த ஒற்றை அடுக்கு மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
அதே போல எந்த ஆடம்பரமும் இல்லாத கல்லறைக் குழியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் பிறந்தவரான பிரான்சிஸ் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் முதல் லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த போப் என்பது குறிப்பிடத்தக்கது. போப்பின் இறுதி சடங்கு நிகழ்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 9 நாள் துக்கம் அனுசரிப்பு தொடங்கியது. அதோடு, புதிய போப்பை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளும் தொடங்கப்படுகின்றன.
* அடுத்த போப் யார்?
போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப் தேர்வு, சிஸ்டின் தேவாலயத்தில் நடத்தப்படும். இதில் உலகம் முழுவதும் இருந்து 135 கர்தினால்கள் வாக்களிப்பார்கள். 3ல் 2 பங்கு பெரும்பான்மை அடிப்படையில் புதிய போப் தேர்வு செய்யப்படுவார். அதிகபட்சம் 33 சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். இதிலும் யாருக்கும் 3ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் இடையே வாக்கெடுப்பு நடத்தி புதிய போப் தேர்வு செய்யப்படுவார். பொதுவாக புதிய போப் தேர்வு செய்யப்பட 15 முதல் 20 நாட்கள் வரை ஆகும். அதுவரையிலும் கர்தினால்கள் வெளி உலகுடன் எந்த தொடர்பும் கொள்ள முடியாது.
The post இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் மரியாதை போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்: உலக தலைவர்கள், லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி appeared first on Dinakaran.