புதுடெல்லி: 2024ல் நடந்த தேர்தல்களில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் கருத்துக்கு அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைசசர் அஸ்வினி வைஷ்ணவிடம், மெட்டா இந்தியா-வின் துணைத் தலைவர் ஷிவ்நாத் துக்ரல் மன்னிப்பு கோரியுள்ளா். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அன்புள்ள அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 2024ல் நடந்த தேர்தல்களில் ஆட்சியில் இருந்த பல கட்சிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற மார்க் ஜுக்கர்பெர்க்-கின் கருத்து பல நாடுகளுக்கு உண்மையாக இருக்கிறது, ஆனால் இந்தியாவிற்கு அல்ல. இந்த கவனக்குறைவான தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம். மெட்டாவுக்கு இந்தியா நம்பமுடியாத அளவிற்கு முக்கியமான நாடாக உள்ளது. மேலும், அதன் புதுமையான எதிர்காலத்தின் மையத்தில் இருக்க நாங்கள் விரும்புகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.