மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்திய பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களை மேலும் உற்சாகமூட்ட ஒன்றிய மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து பல ஆண்டுகளாக நாட்டிய விழாவை டிசம்பரில் தொடங்கி ஜனவரி வரை நடத்தி வருகிறது.
இந்த, விழாவானது கடந்த 22ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தினமும், பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று 5ம் நாள் நிகழ்ச்சியில், கடலூர் சங்கர் சாரல் கலைக்கூடம் குழுவின் சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி, சென்னை ஸ்ரீ பவானி நாட்டியாலயா குழுவின் பரத நாட்டிய நிகழ்ச்சி, பொன்னேரி ஆதித்தமிழர் கலைக் குழுவின் கிராமிய கலை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் கலைஞர்கள் அரங்கேற்றம் செய்தனர்.
இதில், உள்ளூர் மக்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக வந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்தனர். மேலும், நாட்டிய விழாவை கண்டு ரசிக்க ஏராளமான வெளிநாட்டினர் சொகுசு பேருந்து, கார், வேன் மற்றும் அரசுப் பேருந்துகளில் குவிந்து வருவதால் மாமல்லபுரம் களைகட்டி காணப்படுகிறது.
The post இந்திய நாட்டிய விழா கோலாகலம் சுற்றுலா பயணிகளால் களைகட்டும் மாமல்லபுரம் appeared first on Dinakaran.