சென்னை: இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பிரமாண்ட பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியில் முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை எடுத்து பாகிஸ்தான் நிலைகளை அழித்தது. இந்திய ராணுவத்தின் இதைத்தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் எதிராக வீரத்துடன் போர் புரிந்துவரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமை உணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் கடற்கரைச் சாலையில் மே 10ம் தேதி பேரணி நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி, நேற்று மாலை 5 மணியளவில் சென்னை கடற்கரை சாலையில் காவல்துறை இயக்குநர் அலுவலகம் அருகிலிருந்து மாபெரும் பேரணி தொடங்கியது. இந்திய ராணுவத்திற்கு தமிழக மக்கள் சார்பில் ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த பேரணி நடந்தது. பேரணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி கையில் தேசிய கொடி ஏந்தி வழி நடத்தி வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முன்வரிசையில் சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் அனைத்து மத தலைவர்களும் நடந்து வந்தனர். மேலும் தலைமை செயலாளர் முருகானந்தம், போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், வருவாய் துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள், முன்னாள் படைவீரர்கள் உடன் வந்தனர்.
அதன் பின்னால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.ஆர்.பெரியகருப்பன், சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கோவி செழியன், மெய்யநாதன், சி.வி.கணேசன், உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்பிக்கள், மயிலை த.வேலு, இ.பரந்தாமன், ஆர்.டி.சேகர், தாயகம் கவி உள்ளிட்ட எம்எல்ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், ஈ.ஆர்.ஈஸ்வரன், கி.வீரமணி, மமக எம்எல்ஏ அப்துல் சமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் அபுபக்கர், முதன்மை துணைத் தலைவர் எம். அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் அணிவகுத்து வந்தனர், தொடர்ந்து பொதுமக்கள், மாணவர்கள் என லட்சக்கணக்கானோர் இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி உற்சாகமாக பேரணியில் நடந்து வந்தனர். இதனால், கடற்கரை சாலை முழுவதும் தேசிய கொடியை ஏந்தி மக்கள் தலைகளாக காட்சியளித்தது. பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள், ‘இந்திய ராணுவத்தின் செயலுக்கு துணை நிற்போம்’ என வாசகம் பொறித்த தொப்பி மற்றும் ‘இந்திய ராணுவம் வெல்லும்’ என்ற பேட்ஜ் அணிந்து இருந்தனர். மேலும் ‘ஒழிய வேண்டும் பயங்கரவாதம், வளர ேவண்டும் மனிதநேயம், பயங்கரவாதத்தை ஒழித்திட இந்திய ராணுவத்துடன் துணை நிற்போம். நமது நாடு நமது மக்கள், நமது ஒற்றுமை. நாட்டை நாம் காப்போம், அனைவரும் கரம் கோர்ப்போம்’ என்ற வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தி வந்தனர். தொடர்ந்து பேரணி போர் நினைவுச் சின்னம் அருகில் முடிவடைந்தது. சுமார் 4 கி.மீ. தூரத்தை கடக்க 1 மணி நேரம் ஆனது. பேரணி முடிவில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தர்களின் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பங்ேகற்றவர்களின் வசதிக்காக 10 இடங்களில் மருத்துவ முகாம்கள், 200 இடங்களில் நிழற்கூடாரங்கள், 71 இடங்களில் குடிநீர் தொட்டிகள், 50 இடங்களில் கழிப்பறை வசதிகள் என பொதுமக்களின் தேவைகளுக்காகப் பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் வெயிலில் தாக்கத்திற்காக பேரணி நடைபெற்ற 200 இடங்களில் அரேபியன் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நடமாடும் கழிப்பறைகள் 1 இடத்திற்கு 5 இருக்கைகள் என மொத்தம் 10 இடங்களில் 50 இருக்கைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் 6 இடங்களில் She Toilet அமைக்கப்பட்டிருந்தன. பேரணி நடைபெற்ற 10 இடங்களில் மருத்துவக் குழுக்களுடன் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், தேவையான குடிநீர் வசதிகள், உயிர்காக்கும் மருந்துகள், ஒரு முகாமிற்கு 3000 ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் என மொத்தம் 30,000 ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், 15 ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்திய ராணுவத்துக்கு நம்ம செய்யுற நன்றி இது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: தேசப்பற்றில் எப்போதும் முதன்மையாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டு மக்கள். அதே மாதிரி மற்ற மாநிலங்களுக்கு வழிக்காட்டியாக இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணியை அறிவித்து இதில் பொதுமக்கள், அமைச்சர்கள், ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், காவல் படையினர் கலந்து கொண்டுள்ளனர். இது இந்திய ராணுவத்துக்கு செய்யக்கூடிய நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
ராணுவ வீரர்களுக்கு உறுதுணை – கனிமொழி எம்பி
கனிமொழி எம்பி அளித்த பேட்டி: எப்போதுமே முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டுக்கு ஒரு பிரச்னை என்றால், திமுக தலைவர் கலைஞர் காலம் தொட்டு முன்னணியில் இருக்கக்கூடியவர்கள். அதே நேரத்தில் மாநில உரிமைகளுக்காகவும் போராடக்கூடியவர்கள் என்பதை இந்த பேரணி நிருபித்து இருக்கிறது. நம் நாட்டிற்காக போராட கூடிய ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக, அந்த குடும்பங்களுக்கு துணை நிற்போம் என்பதை காட்டுவதற்காக இந்த பேரணி நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பிரமாண்ட பேரணி: முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.