இந்தியாவில் ஆங்கில ஆட்சிக் காலத்தில் முறையான வனத்துறை கட்டமைப்பு ஏற்படுவதற்கு முன்னால், 1806 ஆம் ஆண்டில் மலபார் பகுதியில் தேக்கு மரங்கள் வெட்டுவதை முறைபடுத்த முதன் முறையாக வனப்பாதுகாவலர் பதவி உருவாக்கப்பட்டது. கேப்டன் வாட்சன் என்கிற ஆங்கிலேயே போலீஸ் அதிகாரி இப்பதவியில் பணியமர்த்தப்பட்டார். 1823 இல் ஆண்டு வரை இப்பதவி நீடித்தது.
இந்தியாவிலேயே முதன் முறையாக முழு நேர வனப்பாதுகாவலர் பொறுப்பில் சென்னை மருத்துவக் கல்லூரியில் தாவரவியல் மற்றும் மருந்தியல் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர்.எச்.எப்.சி.கிளக்ஹார்ன் 16.12.1856 இல் நியமிக்கப்பட்டார். இவர் எழுதிய “தென்னிந்திய வனங்களும் தாவரவியல் பூங்காக்களும்“ (1861) என்கிற புத்தகம் இந்திய வனத்துறை வரலாற்றின் முதல் ஆவணமாகும். இவரைத் தொடர்ந்து சென்னை மாகாண வனப்பாதுகாவலராக ராணுவ அலுவலரான ரிச்சர்ட் ஹென்றி பெட்டோம் நியமிக்கப்பட்டார். இவர் தாவரவியலிலும், உயிரியலிலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு எழுதிய “மரவகை தாவரங்கள்”, ”இந்திய பெரணிகள்” புத்தகங்கள் மிக முக்கியமானவை.