பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. அந்த காலகட்டத்தில் பிரிட்டனில் நடந்த தேர்தலில் க்ளமென்ட் அட்லீ வெற்றி பெற்று பிரதமரானார். ‘தேர்தலில் தான் வெற்றி பெற்றால் பிரிட்டிஷ் காலனி நாடுகளுக்கு விடுதலை கொடுப்பேன்’ என்று பிரகடனம் செய்திருந்தார் அட்லீ. அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அன்றைய பிரதமர் சர்ச்சில் தோல்வி அடைந்தார். அட்லீ வெற்றி பெற்றவுடன், தான் அறிவித்தபடியே, இந்தியா உள்ளிட்ட பல்வேறு பிரிட்டிஷ் காலனி நாடுகளுக்கு படிப்படியாக விடுதலை வழங்கினார் என்பது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த செயலாகும்.
அட்லீ வெற்றி, மகாத்மா காந்தியின் அறவழிப் போராட்டம், இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் பங்கு – இவை மூன்றும் சேர்ந்துதான் இந்தியா விடுதலை பெற வழிவகுத்தது. எனவே, காந்தியின் போராட்டத்தால் மட்டுமே நமக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை. விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த எத்தனையோ தியாகிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.