சென்னை: இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக திராவிடர் கழக துணைத்தலைவர் பூங்குன்றன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் எழும்பூர் ரயில் நிலையம் எதிரே போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக கி.வீரமணி உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட தி.க.வினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, துணைத்தலைவர் பூங்குன்றன் உள்ளிட்ட 3 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி பூங்குன்றன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கவில்லை. பொதுமக்களுக்கு எந்த இடையூறுமின்றி போராட்டம் நடந்தது என்று தெரிவித்தார்.இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் பூங்குன்றன் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
The post இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தி.க துணை தலைவருக்கு எதிரான வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.