சென்னை: ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து திமுக மாணவரணி மற்றும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவரணியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவரணி மற்றும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மாணவரணி மற்றும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு முயற்சி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினர். புதுக்கோட்டையில் ஊர்வலமாக சென்ற திமுக மாணவரணி மற்றும் மாணவர் அமைப்பினர் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவ கூட்டமைப்பினர் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
நாகர்கோவில் தபால் நிலையம் முன்பு திரண்ட திமுக மாணவரணியினர் இந்தி திணிப்பை கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர். இதேபோல காஞ்சிபுரம், தாம்பரம், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திமுக மாணவரணி மற்றும் மாணவர் அமைப்பினர் சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.
The post இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம்: திமுக மாணவரணி, மாணவர் அமைப்புகள் சார்பில் கண்டனம் appeared first on Dinakaran.