உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ் குமார், உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. தேசப்பற்று மிக்க திரைப்படங்களில் நடித்ததற்காக 'பாரத் குமார்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் மனோஜ் குமார். அவரின் இயற்பெயர் ஹரிகிருஷன் கிரி கோஸ்வாமி. தற்போது பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பிறந்தவர் இவர்.
பிரிவினையின்போது, குடும்பத்துடன் டெல்லி வந்தார். 1949-ல் திலிப்குமார் நடித்த ‘சப்னம்’ படத்தில் அவரது கதாபாத்திர பெயரான மனோஜ் குமார் என்பதை, சினிமாவுக்கான தனது பெயராக மாற்றிக் கொண்டார். 1960 மற்றும் 1970-களில் முன்னணி இந்தி நடிகராக இருந்த மனோஜ் குமார், 1957-ம் ஆண்டு வெளியான ‘ஃபேஷன்’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.