ஊட்டி: பிரபல இந்தி நடிகரான மிதுன் சக்ரவர்த்திக்கு ஊட்டி, பெங்களூரு, பூனே, ஜோத்பூர் உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நட்சத்திர ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பெயரில் ஊட்டியில் உள்ள ஓட்டல் மேலாளரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், ‘குன்னூரில் ஒரு முக்கியமான புராஜெக்ட் விஷயமாக பணியில் உள்ளேன். நான் இருக்கும் இடத்தில் நெட்வொர்க் பிரச்னை உள்ளது. எனவே, ஓட்டல் வங்கி கணக்கில் உள்ள பணத்தை நான் அனுப்பும் வங்கிக்கணக்கிற்கு அனுப்புமாறு கூறப்பட்டு இருந்தது. மேலும், அந்த பணத்தை தாமதம் இல்லாமல் உடனடியாக அனுப்பும்படியும் செல்போனில் கூறியுள்ளனர். இதனை நம்பியே ஓட்டல் மேலாளர், ஓட்டல் வங்கிக் கணக்கில் இருந்து, வாட்ஸ் அப் குறுந்தகவலில் வந்த வங்கிக்கணக்குக்கு ரூ20 லட்சத்தை அனுப்பிவிட்டார்.
இந்நிலையில் பொங்கல் தினமான மறுநாள் மிதுன் சக்ரவர்த்தி ஊட்டி ஓட்டல் மேலாளரை தொடர்பு கொண்டார். அப்போது, ‘‘நீங்கள் கூறியபடி ரூ.20 லட்சத்தை வங்கிக்கணக்குக்கு அனுப்பிவிட்டேன்’’ என்று மேலாளர் கூறியுள்ளார். அப்போது மிதுன் சக்ரவர்த்தி, ‘‘நான் ஏதும் பணம் அனுப்ப சொல்லவில்லையே’’ என்று கூறியுள்ளார். அப்போதுதான் யாரோ மிதுன் சக்ரவர்த்தி பெயரில் மோசடியில் ஈடுபட்டிருப்பது ஓட்டல் மேலாளருக்கு தெரியவந்தது. உடனடியாக ஊட்டி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
The post இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பெயரில் ரூ20 லட்சம் மோசடி: ஊட்டி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.