பெங்களூர்: இந்துக்களின் கோயிலுக்கு வெளியே முஸ்லீம்கள் கடை வைத்திருக்கக் கூடாது என கூறி கர்நாடகா மாநிலத்தின் ஸ்ரீராம் சேனா உறுப்பினர்கள் அவர்களது கடைகளை சூறையாடினர்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் பிரச்சினை எழுந்தது. முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு வர இந்துத்துவா மாணவர்கள் தடை விதித்தனர்.
இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றம் கடந்த மாதம் ஒரு தீர்ப்பை வெளியிட்டது. எனினும் இந்த பிரச்சினை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது. இந்த நிலையில் முஸ்லீம்களால் ஹலால் செய்யப்படும் இறைச்சியை இந்துக்கள் வாங்கக் கூடாது என பாஜகவினர் ஒரு அதிர்ச்சிகரமான கருத்தை முன் வைத்தனர்.
இந்துக்கள் இந்துக்கள் இந்துக்களால் நடத்தப்படும் இறைச்சி கடைகளில் இறைச்சியை வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் ஒரு புதிய பிரச்சினையை கொண்டு வந்தனர். ஆனால் ஹலால் பிரச்சினையை எல்லாம் மீறி யார் என்ன சொல்லியும் கேட்காமல் மக்கள் எந்த பாகுபாட்டையும் பார்க்காமல் உகாதிக்கு மறுநாள் கறி வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தர்வாத் ஹனுமன் கோயில்
தர்வாத்தில் ஹனுமன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் வாசலில் அனைத்து மதத்தினரும் கடை வைத்துள்ளார்கள். அதில் குறிப்பாக முஸ்லீம்கள் பழக்கடைகளை வைத்து தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் சம்பவ இடத்திற்கு ஸ்ரீராம் சேனா அமைப்பின் உறுப்பினர்கள் வந்தனர்.
தர்ப்பூசணி பழங்கள்
அவர்கள் முஸ்லீம்கள் நடத்தி வந்த தர்ப்பூசணி கடைகளுக்கு சென்று கடையை துவம்சம் செய்தனர். தர்ப்பூசணி உள்ளிட்ட பழங்களை சாலையில் போட்டு உடைத்து சேதப்படுத்தினர். அவர்கள் என்ன சொல்லியும் கேட்காமல் எல்லா பழங்களையும் சேதப்படுத்தினர். இந்துக்களின் கோயில் வாசலில் முஸ்லீம் கடை வைக்கக் கூடாது. வைத்தால் இப்படி துவம்சம் செய்வோம் என ஸ்ரீராம் சேனா அமைப்பினர் சிறிதும் மனசாட்சியே இல்லாமல் தெரிவித்தனர்.
கடைகள் சூறை
இந்த சூறையாடல் சம்பவம் நடந்த போது அங்கிருந்த போலீஸார் ஸ்ரீராம் சேனா அமைப்பினரை தடுக்கவே இல்லை. இதுகுறித்து ஸ்ரீராம் சேனா அமைப்பினர் கூறுகையில் ஹனுமன் கோயிலுக்கு வெளியே கடை வைத்திருப்பவர்கள் எல்லாருமே முஸ்லீம்கள். இதனால் அவர்கள் கடையை காலி செய்ய வேண்டும் என இரு வாரங்களுக்கு முன்பே கூறியிருந்தோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் தற்போது சூறையாடினோம் என அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தனர்.