
அதில்;
ஒரே நாடு ஒரே தேர்தல்- இது ஒன்றியத்தின் கூப்பாடு; எங்கே எங்களின் நிதி ஒதுக்கீடு? கேட்கிறது முதல்வரின் தமிழ்நாடு. இந்த கடினமான நான்காண்டு – இதை கவனமாக கையாண்டு சோதனையில் தினம் தினம் வென்று சரித்திரம் படைப்பார் பல்லாண்டு.
எங்கள் முதல்வருக்கு ஆட்சியில் சாதிக்கவும் தெரியும் , அரசியலை போதிக்கவும் தெரியும். அறநிலையைத் துறையை அறவழியில் வழிநடத்தவும் தெரியும், ஆண்டவனுக்கும் தெரியும் பக்த கோடிகள் அனைவருக்கும் புரியும். நம் முதல்வரின் நான்காண்டுகளில் தான் அடையாளம் இன்றி இருந்த இந்த துறையை கோபுர கலசமாய் வானுயர்ந்து நிற்க வைத்திருக்கின்றார்.
அறநிலையத்துறைக்கு இவர் ஆற்றிய சேவையை கண்டு தெய்வங்களே எங்கள் முதல்வருக்கு துணை நிற்கும். வாக்குரிமை என்ற ஒன்று தெய்வங்களுக்கு இருந்தால் – அதுவும் எங்கள் முதல்வருக்கே கிடைக்கும். திருத்தணிக்கு வரும் ஆந்திர பக்தர்கள் “தேவுடு நிவசிஞ்ச டானிக்கி எஞ்சுகுன்ன பிரதேசம் தமிழ்நாடு“ என்கிறார்கள் அதாவது “இறைவன் வாழ தேர்ந்தெடுத்த இடம் தமிழ்நாடு“ என்று புகழ்கிறார்கள்.
பழனிக்கு வரும் கேரள பக்தர்கள்
“தெய்வங்களுட அனுகிரகம் தமிழ்நாட்டுனானு“ என்கிறார்கள் அதாவது தெய்வங்களின் ஆசிர்வாதம் தமிழ்நாட்டிற்கே என்று புகழ்கிறார்கள்.
திருவண்ணாமலைக்கு வரும் கன்னட பக்தர்கள்
“தைவிக தரிசனங்கல தவரு தமிலுநாடு” என்கிறார்கள் அதாவது தெய்வீக தரிசனங்களுக்கு தாய் வீடு தமிழ்நாடு என்று மனம் மகிழ்கிறார்கள்.
இராமேஸ்வரத்திற்கு வரும் வட இந்திய பக்தர்கள்
“தமிழ்நாடு பகவான்கி தில் கே கரீப் ஹை“ என்கிறார்கள் அதாவது “தமிழ்நாடு இறைவனின் இதயத்திற்கு நெருக்கமானது“ என்று புகழ்கிறார்கள்.
உலகெங்கிலும் இருந்து வரும் பக்தர்கள்
“தமிழ்நாடு இஸ் த கிரேட்டஸ்ட் ஸ்பிரிச்சுவல் லேண்ட்“ என்கிறார்கள் அதாவது உலகத்திலேயே சிறந்த ஆன்மிக பூமி தமிழ்நாடு என்று புகழ்கிறார்கள்.
இப்படி பன்மொழி பேசும் மக்கள் வாழ்த்துதல் இன்முகத் தலைவர் எங்கள் முதல்வரின் ஆட்சிக்கு தான் பெருமையிலும் பெருமை
முதலாமாண்டு மானியக்கோரிக்கைக்கு பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட அறப்பணிகளால்
பெருமையோடு நாம் பேசினோம். அதைவிட இந்த ஆண்டு பெருமையிலும் பெருமையோடு பேசுகிறோம்
காரணம்;
1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கும்பகோணம் துக்காச்சி
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலை தொன்மை மாறாது புதுப்பித்து
யுனெஸ்கோ விருது பெற்ற எங்கள் முதல்வரின் பெருமையோடும்
தடைபட்டு நின்ற கண்டதேவி திருத்தேரை
17 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து பக்தர்களையும் ஒன்றிணைத்து – தெய்வத்தை வீதி உலா வர செய்தவர் நம் முதல்வர்
இருதரப்பு பிரச்சனையால் மூடிக்கிடந்த விழுப்புரம், மேல்பாதி திரௌபதியம்மன் திருக்கோயில் நீதிமன்ற உத்தரவின்படி நான் பேசிக்கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் அனைத்து மக்களும் ஒன்றாக வழிபடுகிறார்கள்.
எங்கள் முதல்வரின் பெருமையினும் பெருமையை எண்ணி பூரிப்போடும், நன்றி பெருக்கோடும் என் உரையை தொடங்குகிறேன்.
சாதனைகள்
முதல்வரின் சாதனைகள் பலவகை…. சான்றுக்கு சொல்கிறேன் சிலவகை….
1) திருக்கோயில் சார்பில் நடைபெற்று வந்த திருமணங்கள் தடைபட்டு இருந்தது. தடைபட்டிருந்த இத்திட்டத்தை
புது பொலிவு பெறவைத்தவர் முதல்வர். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை திருக்கோயில் சார்பாக நடத்த உத்தரவிட்டவர் நம் முதல்வர். 2022 ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,800 திருமணங்கள்நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த திருமணங்களுக்கு செலவுத் தொகை 20,000 ரூபாய் என்று இருந்ததை படிப்படியாக உயர்த்தி கடந்த ஆண்டு முதல் 60,000 ரூபாயாக மாற்றி சீர்வரிசையுடன் 1,800 குடும்பங்களின் வசந்த வாசலை திறந்து வைத்த திறவுகோல் எங்கள் முதல்வரே…
2) திருவிளக்கு
மங்கையர்கள் கொண்டாடும் மகத்தான திருவிளக்கு பூஜைத் திட்டம்; குலசேகரப்பட்டிணம், அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் உட்பட 12 திருக்கோயில்களில் 14.06.2022 அன்று ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 20 அம்மன் திருக்கோயில்களில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று நடைபெறுகிறது. 108 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜையில் இதுவரை 61,020 சக்திகள் பங்கேற்று இருக்கிறார்கள். பெண்களுக்கு பெருமை சேர்க்கும்
இந்த ஆட்சியில் 870 அம்மன் திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்திய பெருமை எங்கள் முதல்வரையே சாரும். சுடர் விளக்கேற்றும் திட்டத்தை தந்த சூரிய விளக்காம் நம் முதல்வரை நன்றி பெருக்கோடு மங்கையர்கள் பாராட்டுகிறார்கள்.
3)திருக்குடமுழுக்கு
குடமுழுக்குகளால் ஆலயங்கள் ஜொலிக்கின்றன. அதனால் ஆன்மிக உள்ளங்கள் குளிர்கின்றன.
* 400 ஆண்டுகளுக்குப் பின் திருவட்டாறு, அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு
* 300 ஆண்டுகளுக்குப் பின் சாத்தனஞ்சேரி, அருள்மிகு கரியமாணிக்க வரதராஜப்பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு
* நூறு – இருநூறு ஆண்டுகளாக குடமுழுக்கு காணாமல் இருந்த திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திக் காட்டிய திருப்பணிச் செம்மல் எங்கள் முதல்வர் ஆவார்.
* திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றது முதல் இன்று வரை 2,820 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஒரே ஒரு இராமர் கோயிலுக்கு எத்தனை ஆரவாரம் 23 இராமர் கோயிலுக்கு குடமுழுக்கு முதல்வரிடம் இல்லையே ஆர்ப்பாட்டம். திருக்கோயில் குடமுழுக்குகள் இந்தாண்டு இறுதிக்குள் 3,000 எண்ணிக்கையை கடக்கும்
4) திருப்பணி
கோடிகளில் நடக்குது திருக்கோயில் திருப்பணி பக்தகோடிகளின் மனங்களை குளிர வைப்பதே இந்த ஆட்சியின் நற்பணி
* இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மாநில வல்லுநர் குழுவின் 102 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
* இதில் 11,666 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
* 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 1,122 திருக்கோயில்களுக்கு மட்டுமே திருப்பணி அனுமதி வழங்கப்பட்டது
* இத்துறையின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உபயதாரர்கள் திருப்பணிகளுக்கு 1,320 கோடி ரூபாயை அள்ளி தந்திருக்கிறார்கள். இது இந்த ஆட்சியின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடு ஆகும்.
5) திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம்
இறை பசியோடு வரும் பக்த கோடிகளின் வயிற்று பசியையும் தீர்க்கும் வாழும் வள்ளலார் எங்கள் முதல்வர். ஒருவேளை அன்னதானத் திட்டத்தை 23 திருக்கோயில்களுக்கு இவ்வரசு விரிவுபடுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் இரண்டு திருக்கோயில்களில் இருந்த நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரும் 11 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தினார் நம் முதல்வர்
ஆண்டொன்றுக்கு இத்திட்டத்தால் சுமார் 3.5 கோடி பக்தர்கள் பசியாறுகிறார்கள். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.120 கோடி செலவிடப்படுகிறது. இந்த ஆண்டும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் . ஒன்றிய அளவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 523 திருக்கோயில்களுக்கு ஒன்றிய அரசின் போக் (BHOG) எனப்படும் தர நிர்ணய சான்றிதழை பெற்று சாதனை படைத்துள்ளோம்.
தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர திருவிழா நாட்களில் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் 4 இலட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு விழாக்களின் போதும் 4 இலட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. சொன்னதை செய்கின்ற அரசு என்பதற்கு இதுவே ஓர் சாட்சி என்று பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்
6) பழநி கல்லூரி மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் மதிய உணவு
அறிவு பசியோடு வரும் மாணவர்களின் வயிற்று பசியை தீர்ப்பதே எங்கள் முதற்பணி பழநி திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கி மாநிலத்திலேயே முதன்முதலில் கல்லூரிகளுக்கு இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய மங்காப் புகழுக்கு சொந்தக்காரர் எங்கள் முதல்வர்.
இத்திட்டத்தால் 6,000 மாணவச் செல்வங்கள் பயன்பெறுகின்றனர். இந்த திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6.92 கோடி செலவிடப்படுகிறது. அறநிலையத்துறையின் வரலாற்றில் கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் அதிக அளவு உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்த அன்னதான பிரபு எங்கள் முதல்வர் ஆவார்.
7) ஆன்மிக பயணம்:
முதன்முதலில் ஒன்றியத்திலேயே காசி இராமேஸ்வரம் ஆன்மிகப்பயணத் திட்டத்தை கொண்டு வந்தவர் எங்கள் முதல்வர்
காசி, இராமேஸ்வரம் சென்று காண்போமே சிவனாரை நின்று ஆடியில் அம்மன் அருள் பெற, புரட்டாசியில் பெருமாளை காண, அறுபடை வீட்டையும் தரிசிக்க ஆன்மிக பயண திட்டமும் உண்டு மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆன்மிக பயணத்திற்கு கூடுதல் மானியமும் உண்டு. இத்திட்டங்களுக்கு ஆகின்ற மொத்த செலவினங்களையும் அரசே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு மானியத்தை அள்ளித் தந்தவர் முதல்வர். இத்திட்டத்தின் வாயிலாக 4,953 பக்தர்கள் பயனடைந்து இருக்கிறார்கள். இந்த ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கையும் கூடும் – நிதியும் கூடும். இந்த மூத்த இறையன்பர்களின் நல்லாசிகளும் ஆதரவும் எங்கள் முதல்வருக்கு மேலும், மேலும் பலம் சேர்க்கும்
8) ஒருகால பூஜைத் திட்டம்
பெயரளவுக்கு இருந்த இந்தத் திட்டம் தற்போது அறநிலையத்துறையின் வரலாற்றில் முதல்வரின் பெயர் சொல்லும் திட்டமாக போற்றப்படுகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற போது 12,959 திருக்கோயில்கள் இத்திட்டத்தில் இருந்தன. இதன் வைப்பு நிதி ஒரு கோயிலுக்கு 1 இலட்சம் ரூபாய் என இருந்தது. இது போதாது என்று ரூ.2 இலட்சமானது. போதாது, போதாது என்ற குரல் கேட்டு ரூ.2.50 இலட்சமானது. கூடுதலாக 5,000 திருக்கோயில்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான வைப்பு நிதி ரூ.310 கோடி அரசே மானியமாக வழங்கியது.
திருக்கோயில்களுக்கு செலவாகின்ற மின்சார கட்டணத் தொகையும் துறையே செலுத்துகிறது. 18,000 திருக்கோயில்களில் பணிபுரிகின்ற அர்ச்சகர்களுக்கு 1000 ரூபாய் மாதந்தோறும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது . அர்ச்சகர்களுடைய குடும்பத்தில் உயர் கல்வி படிக்கின்ற மாணவச் செல்வங்களுக்கு தலா ரூ.10,000 உதவித் தொகை என்று 900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
இத்திட்டங்களால் ஆலயங்களும் ஒளி பெறுகின்றன அர்ச்சகர்களின் வாழ்வும் சுடர் விடுகின்றன அவர்தம் பிள்ளைகளும் கல்வி பயன்பெறுகின்றனர்.
9) கிராமப்புற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணி:
ஒரு ஆட்சியாளருடைய பார்வை கிராமப்புற மற்றும் ஆதி திராவிடர் மக்கள் வசிக்கின்ற பகுதியை நோக்கி விரிந்தால் தான் அந்த நாட்டில் சமூகநீதி நிலைக்கும். அந்த வகையில் நம் முதல்வரின் பார்வை கிராமப்புற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் மீது குவிந்த காரணத்தினால் இத்திருப்பணிக்கான நிதி ரூ.1 இலட்சத்தில் இருந்து அடுத்து ரூ.2 இலட்சமாகி அடுத்து ரூ.2.50 இலட்சமாக உயர்த்தி 4 ஆண்டுகளில் 10,000 திருக்கோயில்களுக்கு ரூ.212 கோடியை ஆரவாரமில்லாமல் அள்ளி வழங்கி அருள்பாலிக்க செய்த அறநிலையத்துறையின் அருளாளரே எங்கள் முதல்வரே வாழ்வீர் நீங்கள் பல்லாண்டு.
இத்திட்டம் அறநிலையத்துறையின் ஓர் அமைதிப்புரட்சி
10. அர்ச்சகர் குடியிருப்பு
அர்ச்சகர்களுக்கு எதிரானது இந்த அரசு என்று அர்ச்சனை செய்பவர்கள் மத்தியில் அர்ச்சகர்கள் நலனுக்காக ரூ.136.64 கோடி மதிப்பீட்டில் 386 குடியிருப்புகள் கட்டுவதன் மூலம் வாழ்வாதாரத்துடன் வாழ்விடமும் தந்து வாழ்வாங்கு வாழ வைப்பவர் எங்கள் முதல்வர் என்றால் அது மிகையாகாது. இந்த ஆண்டும் இத்திட்டத்தை
விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளார் எங்கள் முதல்வர்.
11) இராஜகோபுரம் திருப்பணி
அறநிலையத்துறையின் சாதனைகளுக்கு உயர்ந்து நிற்கும் இராஜகோபுரங்களே சாட்சி. மன்னராட்சி காலம் தொடங்கி கடந்த காலங்கள் வரை கட்டி முடிக்கப்படாத மொட்டைக் கோபுரங்களைக் கூட இராஜகோபுரங்களாக உயர்த்தும் பெருமை இந்த அரசையே சாரும். ”மூன்று நிலை இராஜகோபுரம் 49 ஐந்து நிலை இராஜகோபுரம் 35
ஏழு நிலை இராஜகோபுரம் 8 ஒன்பது நிலை இராஜகோபுரம் 3 என 95 புதிய இராஜகோபுரங்கள் ரூ.186.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. 351 இராஜகோபுரங்களின் புனரமைப்பு பணி ரூ.93.84 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. மன்னராட்சி காலத்து கோபுரங்கள் அவர்கள் புகழ் பாடும் மக்களாட்சி காலத்து கோபுரங்கள் எங்கள் முதல்வரின் புகழ் மட்டும் தான் பாடும்.
12) தங்க முதலீட்டுத் திட்டம்:
கடந்த ஆட்சியில் மங்கி இருந்த அறநிலையத்துறை இந்த ஆட்சியில் சாதனைகளால் பொங்கி எழுகிறது என்பதற்கு இத்திட்டம் ஒரு சாட்சி கொட்டிக் கிடந்த தங்கத்தை,கட்டித் தங்கமாய் சுத்தப்படுத்தியதால் திருக்கோயிலுக்கு கிடைத்தது 1,074 கிலோ சுத்த தங்கம்திருக்கோயில் திருப்பணிக்கு கிடைத்தது ஆண்டுக்கு ரூ.18 கோடி இத்திட்டத்தை தொடங்கும் போது ஏச்சுக்கள், பேச்சுக்கள், அவதூறு, அவமானங்கள் சொல்லில் அடங்காதவை.
சட்டப்போராட்டம் நடத்தி அத்தனையும் தாண்டி விமர்சன வெப்பத்தால் புடம் போட்ட தங்கமாய் திருக்கோயில்கள்
இன்றைக்கு மிளிர்கிறது, ஒளிர்கிறது. தொடரும் இத்திட்டம்.
13) பெருந்திட்ட வரைவு (Master Plan)
பெருந்திட்ட வரைவு என்ற ஒரு சொல் வடமாநிலங்களில் மட்டுமே கேட்டது. இந்து சமய அறநிலையத்துறையின்
வரலாற்றில் பெருந்திட்ட வரைவு என்ற வார்த்தையே இந்த ஆட்சியில் தான் கேட்கிறது. 19 திருக்கோயில்களில்
ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு – பக்தர்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள்
நடைபெற்று வருகின்றன.
பிற மாநிலங்களுக்கு ஒரு சில திருக்கோயில்கள் தான் அடையாளமாக திகழ்கின்றன இந்த பெருந்திட்ட வரைவுப் பணிகள் நிறைவுறும் போது தமிழ்நாட்டிற்கு இத்திட்டத்தால் மேலும், 19 திருக்கோயில்களும் அடையாளமாகத் திகழும். இத்திட்டத்தில் இந்த ஆண்டும் 4 திருக்கோயில்களை சேர்க்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
10 ஆண்டுகளாக அனுமதி கிடைக்காமல் இருந்த அருள்மிகு பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், அதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருப்பணிகளுக்கும் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான்
அனுமதி வழங்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரு திருக்கோயில்களிலும் மாஸ்டர் பிளான் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப்பணிகள் நிறைவுபெறும்
14) திருக்கோயில்களின் நிருவாகச் செலவினங்களுக்கு அரசு மானியம்:
* கன்னியாகுமரி மாவட்டத்தில் 490 திருக்கோயில்களுக்கு ரூ.3 கோடியாக இருந்த அரசு மானியம் படிப்படியாக ரூ.13 கோடியாக உயர்வு
* புதுக்கோட்டை நிர்வாகத்தில் உள்ள 225 திருக்கோயில்களுக்கு ரூ.1 கோடியாக இருந்த அரசு மானியம் படிப்படியாக ரூ.8 கோடியாக உயர்வு
* தஞ்சாவூர் அரண்மனை நிர்வாகம் 88 திருக்கோயில்களுக்கு முதல்முறையாக ரூ.3 கோடி அரசு மானியம் படிப்படியாக ரூ.6 கோடியாக உயர்வு
மொத்தம் 803 திருக்கோயில்களுக்கு ரூ.64 கோடி இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு மானியமாக வழங்கி நிதியின்றி தத்தளித்த திருக்கோயில்களை கரை சேர்த்த கலங்கரை விளக்கம் எங்கள் முதல்வர் என்பதை பெருமையோடு சொல்கிறேன். இத்திட்டத்தால் காலபூஜை காலத்தோடு நடைபெறுகிறது. திருக்கோயில்களின் திருப்பணிகளும் தொய்வின்றி தொடர்கின்றன. அர்ச்சகர்கள் பணியாளர்களும் பயன் பெறுகின்றனர். அறநிலையத்துறையில் முதல்வரின் சாதனை பெரிது பெரிதினும் பெரிது கேள் என்றான் பாரதி பெரிது பெரிது புவனம் பெரிது என்றாள் ஔவைஇதோ எங்கள் முதல்வரின் ஒரு சில பெரிதுகளை கேளுங்கள்
* வள்ளலார் சர்வதேச மையம் பெரிது
* 1000 ஆண்டு பழமையான திருக்கோயில் திருப்பணி பெரிது
* முத்தமிழ் முருகன் மாநாடு பெரிது
* 2,820 குடமுழுக்குகள் பெரிது
* ஒருகால பூஜை திட்டம் பெரிது
* காசி இராமேஸ்வரம், பயணம் திட்டம் பெரிது
* பெருந்திட்ட வரைவு திருப்பணி பெரிது
* தங்க முதலீட்டு திட்டம் பெரிது
* திருத்தேர் திருப்பணி பெரிது
* பெண் ஓதுவார் நியமனம் பெரிது
* அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் பெரிது
* நாள் முழுவதும் அன்னதானம் பெரிது
* திருக்கோயில் திருமண திட்டம் பெரிது
* திருக்கோயில் மருத்துவ மையங்கள் பெரிது
* திருவிளக்கு பூஜை திட்டம் பெரிது
* நிலமீட்பு, சிலைமீட்பு பெரிது
* ரோவர் கருவி மூலம் நில அளவை பெரிது
* திருக்குளம் திருப்பணி பெரிது
* கிராம ஆதிதிராவிடர் திருக்கோயில் திருப்பணி பெரிது
* நந்தவனங்கள் நலம்பெறும் திட்டங்கள் பெரிது
* தெப்பகுளம் திருவிழாக்கள் பெரிது
* மகாசிவராத்திரி திருவிழாக்கள் பெரிது
* அருளாளர்கள் மற்றும் சித்தர்களுக்கு விழா பெரிது
* அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் பெரிது
* திருக்கோயில்களில் ஓலைச்சுவடி பாதுகாப்பு பெரிது
* பதிப்பகம் மூலம் 500 நூல்கள் மறுபதிப்பு பெரிது
*புதிய திருமண மண்டபங்கள் கட்டுதல் பெரிது
* கலைஞர் தலமரக்கன்றுகள் 1 இலட்சம் நடுதல் பெரிது
* கோயில், துறை செயல்பாடுகள் கணினி மயம் பெரிது
* முதுநிலை திருக்கோயில்கள் கண்காணிப்பு பணி பெரிது
* திங்கள்தோறும் திருக்கோயில் உழவாரப்பணி பெரிது
* யானைகள், பசுக்கள் நலவாழ்வு திட்டம் பெரிது
* திருக்கோயில் பெயரில் பட்டா மீண்டும் பெறுதல் பெரிது
* துறையின் ITMS புதுமைக்கு ஸ்காட்ச் விருது பெரிது
* முதல்வர் அன்னதானத் திட்டத்துக்கு BHOG சான்று பெரிது
* முதல்வரின் சாதனைக்கு யுனெஸ்கோ விருது பெரிது
* திருவள்ளுவருக்கு திருக்கோயில் பெரிது
* பழநி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மூன்று வேளை உணவு பெரிது
* பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டுமானம் பெரிது
* உபயதாரர் நிதி உயர்வு பெரிது
இவை அனைத்தையும் சாதிக்கும் எங்கள் முதல்வரின் ஆற்றல் பெரிதினும் பெரிது இந்த பொற்கால ஆட்சியின் புகழ் பெரிதினும் பெரிது.
சட்டமன்ற அறிவிப்புகள் 2025-2026
* இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த ஆண்டு 2,090 திருக்கோயில்களில் ரூ.926 கோடி மதிப்பீட்டில் 2,114 திருப்பணிகள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
* திருப்பணிகள் மற்றும் இதரப்பணிகள் 210 அறிவிப்புகளாக வடிவமைக்கப்பட்டு, நேரமின்மை காரணமாக 94 அறிவிப்புகளை 24 அறிவிப்புகளாக இணைத்து வாசிக்கிறேன்.
மீதமுள்ள 116 அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வாசித்ததாக கருதி பதிவு செய்து கொள்ளுமாறு பேரவைத் தலைவர் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
1. திருக்கோயில் திருமண திட்டம் (அறிவிப்பு எண்.1) திருக்கோயில் திருமண திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 1,000 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்படும். மேலும், இணை ஒன்றுக்கு கூடுதலாக ரூ.10,000 சேர்த்து ரூ.70,000 மதிப்புள்ள சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.
2. ஒருகால பூசை திட்டம் (அறிவிப்பு எண். 2, 3 மற்றும் 4) ஒருகால பூசை திட்டத்தின் கீழ் ஏற்கனவே 18,000 திருக்கோயில்கள் பயனடைந்து வருகின்றன.இவ்வாண்டு மேலும், 1,000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.25 கோடி அரசு மானியமாக வழங்கப்படும். அர்ச்சகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மாத ஊக்கத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் அர்ச்சகர்களுக்கு புத்தாடை வழங்கப்படும் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 19,000 திருக்கோயில்களுக்கு பூஜைகள் செய்திட பூஜை உபகரணங்கள் ரூ.15 கோடி செலவில் வழங்கப்படும். எங்கள் முதல்வரின் சிந்தனை வெளிச்சத்தில் கோயில் விளக்குகளும் சுடர்கின்றன குடும்ப விளக்குகளும் ஒளிர்கின்றன.
3. ஆன்மிகப் பயணம் (அறிவிப்பு எண்.44 முதல் 49 வரை – 6 அறிவிப்புகள்)
* இராமேசுவரம் – காசி ஆன்மிகப்பயணம் 600 பக்தர்களுக்கு
* அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப்பயணம் 2,000 பக்தர்களுக்கு
* அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப்பயணம் 2,000 பக்தர்களுக்கு
* அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப்பயணம் 2,000 பக்தர்களுக்கு
*வைணவ திருக்கோயில்களுக்கு ஆன்மிகப்பயணம் 2,000 பக்தர்களுக்கு
*முக்திநாத் ஆன்மிகப்பயணம் 500 பக்தர்களுக்கு
*மானசரோவர் ஆன்மிகப்பயணம் 500 பக்தர்களுக்கு இதற்கான செலவு ரூ.11.50 கோடி அரசு மானியமாக வழங்கும்.
4. ஓதுவார் நியமனம் (அறிவிப்பு எண்.7) இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் உள்ள 70 ஓதுவார் காலிப் பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும். திருக்கோயில்கள் சார்பில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்று சான்றிதழ் பெற்ற ஓதுவார்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட 45 ஓதுவார்களில் 11 பெண் ஓதுவார்கள் என்பது பெருமைக்குரியது ஓதுவார் நியமனத்தில் பெண்ணுரிமை முன்னுரிமை ! திசையெட்டும் ஒலிக்கிறது தேவாரத் தமிழ் இனிமை!
5. குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கல் (அறிவிப்பு எண்.8) பத்து திருக்கோயில்களுக்கு இறை தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களின் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ.50 இலட்சம் செலவிடப்படும். காட்சி தந்து பால் தந்தார் ஞானசம்பந்தருக்கு இறைவன், காய்ச்சிய பால் தந்தார் குழந்தைகளுக்கு நம் முதல்வர்!
6. மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டம் (அறிவிப்பு எண்.36 முதல் 39 வரை 4 அறிவிப்புகள்) இறை தரிசனத்திற்கு வருகின்ற மாற்றுதிறனாளிகளுக்கு
* திருக்கோயில்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் இல்லை
*வின்ச் மற்றும் ரோப் கார்களில் கட்டணம் இல்லை
*இறை தரிசனத்திற்கும் கட்டணம் இல்லை இந்த அரசு எல்லாருக்கும் எல்லாம் கொடுக்கும் அரசு இல்லாமை என்பதை இல்லாமல் ஆக்கும் அரசு
7. இராஜகோபுரங்கள் (அறிவிப்பு எண்.90 முதல் 100 வரை 11 அறிவிப்புகள்) · ஏழு நிலை இராஜகோபுரங்கள்-2 · ஐந்து நிலை இராஜகோபுரங்கள்- 4 · மூன்று நிலை இராஜகோபுரங்கள் – 7 13 புதிய இராஜகோபுரங்கள் ரூ.29.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
8. பெருந்திட்ட வரைவு (அறிவிப்பு எண்.136 முதல் 139 வரை ) Ø கொடுமுடி, அருள்மிகு மகுடேசுவரர் மற்றும் வீரநாராயண பெருமாள் திருக்கோயில் Ø பவானி, அருள்மிகு சங்கமேசுவரர், திருக்கோயில் Ø கன்னியாகுமரி, அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் Ø வேலூர், வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில் ஆகிய நான்கு திருக்கோயில்களில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு பணிகள் பெருமையுடன் இவ்வாண்டு மேற்கொள்ளப்படும்.
9. சாலை/பாதை அமைத்தல் (அறிவிப்பு எண். 140 முதல் 145 வரை – 6 அறிவிப்புகள்)
* சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சாலை விரிவாக்கத்திற்கு ரூ.67 கோடி அரசு மானியம்.
* திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாற்று மலைப்பாதைக்கு ரூ.57.50 கோடி அரசு மானியம்.
* பண்ணாரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் தார்சாலை அமைக்க ரூ.3.50 கோடி
* திண்டல், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் படிவழிப்பாதை அமைக்க ரூ.1.90 கோடி.
* சோளிங்கர், சின்னமலைக்கு மலைப்பாதை அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
* கோவை, மதுக்கரை, அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் கம்பிவட ஊர்தி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். மலைப்பாக இருந்த பாதை மலை பாதையானது மாண்புமிகு முதல்வரின் திட்டங்களால் உயர்வானது
10. இருசக்கர வாகனம் வாங்க அரசு மானியம் (அறிவிப்பு எண்.5)
*ஆதிதிராவிடர் திருக்கோயில் பூசாரிகள்
* ஒருகால பூசை திட்ட திருக்கோயில் பூசாரிகள்,
* நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ள பூசாரிகள், 10,000 நபர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.12 ஆயிரம் அரசு மானியம். இதற்கான மொத்த மானியத் தொகை ரூ.12 கோடி அரசு நிதியாக வழங்கப்படும். வாழ்வின் துயரம் போக்கி உயரம் நோக்கி பயணிக்க வைப்பவர் எங்கள் முதல்வர்
11. வெளிநாடு வாழ் பக்தர்களுக்கு ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் (அறிவிப்பு எண்.40)
* வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் 48 முதுநிலை திருக்கோயில்களுக்கு அதிகளவில் இறை தரிசனத்திற்கு வருகிறார்கள்
* இறை அன்பர்களுக்கு உதவிட 24 மணி நேரமும் செயல்படுகின்ற உதவி மையம் ஆணையர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்படும்.
* தரிசனம், தங்குமிட வசதி, பயணத் திட்டத்திற்கு உதவிட தொடர்பு எண்கள் அறிவிக்கப்படும்.
* இத்திட்டம் மே-1 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும்.
12. மரக்கன்றுகள் நடுதல் (அறிவிப்பு எண்.43) மரங்களையும் தெய்வமாக வணங்கும் வழக்கம் தமிழ் மண்ணில் உண்டு. ஒவ்வொரு கோயிலுக்கும் தல விருட்சம் உண்டு திருக்கோயில்களுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத நிலங்களில், ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 1 இலட்சம் வீதம் சமூக ஆர்வலர்கள் மற்றும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி வழங்கும் நிறுனங்கள் மூலம் பனை, இலுப்பை உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். இந்த ஆண்டு 20 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும். பல விருட்சங்களை நடும் முயற்சி பக்தி மார்க்கத்தில் ஒரு பசுமை புரட்சி
13. மூத்த தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்தல் (அறிவிப்பு எண்.28) இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு சேர்க்கப்படும்.
14. நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் (அறிவிப்பு எண்.09 மற்றும் 12)
* பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்
* பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில்
* கொடைக்கானல், அருள்மிகு குறிஞ்சியாண்டவர் திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களில் செயல்படுத்தப்படும். இத்துடன் நாள் முழுவதும் அன்னதான திட்டம் உள்ள 15 திருக்கோயில்களிலும் வழக்கமான உணவுடன் வடை மற்றும் பாயாசம் சேர்த்து வழங்கப்படும்
15. பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்குதல் (அறிவிப்பு எண்.27) ஐந்து திருக்கோயில்களில் ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒரு திருக்கோயிலுக்கு 20,000 பக்தர்கள் வீதம் ஒரு இலட்சம் பெண் பக்தர்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கப்படும். இத்திட்டம் வரும் ஆடி மாதம் முதல் செயல்படுத்தப்படும். பெண்களுக்கு விடியல் பயணம் பெண்களுக்கு உரிமை தொகை பெண் பக்தர்களுக்கு மங்கல பொருட்கள் வழங்கும் எங்கள் மக்கள் முதல்வரை வாழ்த்திடுவோம்.
16. ஓய்வூதியம் (அறிவிப்பு எண். 57 மற்றும் 58 – 2 அறிவிப்புகள்)
* துறைநிலை ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4,000/-த்திலிருந்து ரூ.5,000/- ஆக உயர்வு
* துறைநிலை குடும்ப ஓய்வூதியம் ரூ.2,000/-த்திலிருந்து ரூ.2,500/- ஆக உயர்வு
* EPF ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கும் துறைநிலை ஓய்வூதியத்திற்கு இணையாக கருணைத்தொகை வழங்கப்படும்.
* EPF குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு துறை நிலை குடும்ப ஓய்வூதியத்திற்கு இணையாக கருணைத்தொகை வழங்கப்படும்.
17. அர்ச்சகர் (ம) பணியாளர்கள் குடியிருப்பு (அறிவிப்பு எண்.191 முதல் 194 வரை – 4 அறிவிப்புகள்)
* சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
* இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,
* ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்
* வேளச்சேரி, அருள்மிகு தண்டீசுவரர் திருக்கோயில் ஆகிய 4 திருக்கோயில்களில் ரூ.51.50 கோடி மதிப்பீட்டில் 200 அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.
18. திருக்கோயில் திருப்பணி (அறிவிப்பு எண்.101 முதல் 134 வரை – 34 அறிவிப்புகள்) 20 இணை ஆணையர் மண்டலங்களில் 1,907 திருக்கோயில்களுக்கு ரூ.225 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும். (பட்டியல் தனி புத்தகமாக வழங்கப்பட்டுள்ளது)
19 மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா உணவு மற்றும் உறைவிடம் (அறிவிப்பு எண்.79 மற்றும் 80)
* பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியருக்கு அனைத்து நாட்களிலும், கட்டணமில்லா மூன்று வேளையும் உணவு வழங்கப்படும்.
*இதற்கான செலவு ஆண்டொன்றுக்கு ரூ.72 இலட்சம் இத்திட்டம் கழக ஆட்சியில் முத்திரை பதிக்கும் திட்டம்
* திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் சார்பாக நடத்தப்பட்டு வரும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தங்கிப் பயிலும் 100 மாணவியருக்கு மூன்று வேளை உணவும், உறைவிடமும் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
* இதற்கான செலவு ஆண்டொன்றுக்கு ரூ.75 இலட்சம் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட ஆட்சி மாணவர்களின் மகிழ்ச்சியில் இறைவனைக் காணும் ஆட்சி
20. திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து (அறிவிப்பு எண்.6) திருச்செந்தூர், திருவரங்கம், இராமேஸ்வரம் உள்ளிட்ட பத்து திருக்கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்களுக்கான தரிசனக் கட்டணம் முழுமையாக இரத்து செய்யப்படும். (பட்டியல் இணைப்பு)
21. கல்லூரிகள் (அறிவிப்பு எண்.76 முதல் 78 வரை – 3 அறிவிப்புகள்)
* காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்,
* சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்கள் சார்பாக செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும். ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சார்பாக கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி அமைக்கப்படும். மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக பல்தொழில்நுட்ப கல்லூரி (பாலிடெக்னிக் கல்லூரி) அமைக்கப்படும்.
22. சேமநலநிதி ஓய்வூதியதார்களுக்கு பொங்கல் கருணைக்கொடை (அறிவிப்பு எண்.54, 55 – 2 அறிவிப்புகள்) திருக்கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, பணியாளர் சேமநலநிதி நிறுவனம் (EPFO) மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் முதல்முறையாக பொங்கல் கருணைக்கொடை ரூ.2,000/- வழங்கப்படும்.
23. பூசாரிகள் நலவாரியம் (அறிவிப்பு எண். 62 மற்றும் 63 – 2 அறிவிப்புகள்)
* துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக் கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் கிராமக்கோயில் பூசாரிகளின் எண்ணிக்கை 4,000-லிருந்து 5,000 ஆக உயர்த்தப்படும்.
* பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திட ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.72,000-லிருந்து ரூ.1 இலட்சமாக உயர்த்தப்படும். புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி சிறப்பு முகாம் நடத்தப்படும். புதிய உறுப்பினர் சேர்க்கை நிறைவடைந்தவுடன், ஒருகால பூஜைத் திட்ட அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு நிகரான ஊக்கத்தொகை பூசாரி நலவாரிய உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்.
24. பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை (அறிவிப்பு எண்.68) இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேர வகுப்பு மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.4,000 லிருந்து 10,000 ஆகவும், பகுதி நேர வகுப்பு மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.2,000 லிருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு உன்னதமான பயிற்சியும் கிடைக்கிறது. உச்சமான ஊக்கத் தொகையும் கிடைக்கிறது முதல்வர் ஆட்சியின் ஆக்கத் தொகை இந்த ஊக்கத்தொகைக்கு சான்று
நிறைவுரை
ஆயிரக்கணக்கான ஆலயங்களின் கோபுர கலசங்கள் அனைத்தும் திராவிடச் சூரியனின் ஒளிபட்டு மின்னுகின்றன. அதனால் ஆண்டவனின் ஆதரவோ எங்கள் முதல்வருக்கு தான் என்று சொல்லுகின்றன. எங்கள் முதல்வரின் பொற்கால ஆட்சியைப் பற்றி கம்பர் இருந்திருந்தால் திராவிட காவியம் செய்திருப்பார் வள்ளுவர் இருந்திருந்தால் புதுக்குறள் புனைந்திருப்பார் இளங்கோ இருந்திருந்தால் சமநீதி காப்பியம் வடித்திருப்பார்
பாரதியார் இருந்திருந்தால் புதுக்கவிதை ஆயிரம் பாடியிருப்பார் பாரதிதாசன் இருந்திருந்தால் கொள்கை விளக்கு இயற்றியிருப்பார். பெரியார், அண்ணா, கலைஞர் இருந்திருந்தால் கைதட்டி மகிழ்ந்திருப்பார்கள்.
* அறநிலையத்துறை வரலாற்றில் ஒரு முதல்வர் அதன் தலைமை அலுவலகத்திற்கு தானே வந்து… கால் பதித்த வரலாற்றைஇதுவரை கண்டதில்லை இந்த துறை.
* ஒரு முறையா… இருமுறையா… நான்கு முறை முதல்வரின் வருகையினால் பேறு பெற்றது இந்தத் துறை
அறநிலையத்துறையின் 74 ஆண்டுகால வரலாற்றில் திராவிட மாடல் நாயகர் எங்கள் முதல்வர் தான் நான்கு ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரலாற்று பதிவை நிகழ்த்தியிருக்கின்றார். 100 என்பது எங்கள் முதல்வரின் வாழ்க்கையில் பின்னி பிணைந்த ஒன்று. இவர் காலம் நூற்றாண்டுகளின் காலம் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா இனமான பேராசிரியர் பெருந்தகைக்கு நூற்றாண்டு விழா நடமாடும் பல்கலைக்கழக நாவலருக்கு நூற்றாண்டு விழா வாலிப பெரியார் AVP ஆசைத்தம்பிக்கு நூற்றாண்டு விழா தோழர்களின் இரும்பு மனிதர் சங்கரய்யா வாழும் காலத்திலேயே அவருக்கு நூற்றாண்டு விழா
வாழும் விடுதலை போராட்ட வீரர் தோழர் நல்லகண்ணுக்கு நூற்றாண்டு விழா வைக்கம் போராட்டத்தின் சமூக நீதி நூற்றாண்டு விழா இப்படி பல நூற்றாண்டுகளை தன்வசமாக்கிக் கொண்ட எங்கள் முதல்வரின் சாதனைக்கு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலிலும் மக்கள் நூற்றுக்கு நூறு வெற்றியைத் தருவார்கள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த அவையில் நான் ஒன்றை பதிவிடுகிறேன். 2026-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகும் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை நம் முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் தாக்கல் செய்யும் என்பதை மிடுக்கோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிரிகளின் சக்கர வியூகத்தில் சிக்குகின்ற அபிமன்யு அல்ல எங்கள் முதல்வர். விரல் சக்கரத்தால் வியூகங்களை உடைக்கும் கிருஷ்ண பரமாத்மாவை போன்றவர் எங்கள் முதல்வர். “நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை என் எதிரிதான் தீர்மானிக்கிறான்“ என்றார் புரட்சியாளர் மாவோ.எங்கள் முதல்வர் கையில் உயர்த்திப் பிடிப்பது சமூக நீதி என்னும் வேலாயுதம் சம நீதி என்னும் சூலாயுதம் சமத்துவம் என்னும் பேராயுதம். எல்லோர்க்கும் எல்லாம் என்னும் சக்ராயுதம் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்னும் முழக்கமே எங்கள் முதல்வரின் போர் ஆயுதம் இத்தனை ஆயுதங்களோடு எங்கள் முதல்வரின் சமூக நீதிப் போராட்டம்வெல்லும் வெல்லும் வெல்லும்
இந்த ஆட்சி அறநிலையத்துறைக்கு என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு சொல்கிறேன் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு அரசு நிதியாக 1,006 கோடி ரூபாயை திருப்பணிக்கும் திருக்கோயில் சார்ந்த அறப்பணிக்கும் அள்ளிக் கொடுத்த அட்சய பாத்திரம் நம் முதல்வர். என்ன கொடுப்பான், எவை கொடுப்பான் என்று இவர்கள் எண்ணுமுன்னே பொன்னும் கொடுப்பான், பொருளும் கொடுப்பான் போதாது போதாதென்றால் இன்னும் கொடுப்பான், இவையும் குறைவென்றால் தன்னைக் கொடுப்பான், தயாபரனே – வாழும் கர்ணனாக இருப்பவரே எங்கள் முதல்வரே வாழிய நீவீர் பல்லாண்டு பல்லாண்டு.
உறுப்பினர்கள் கொடுத்த 198 வெட்டுத் தீர்மானங்களை திரும்பப் பெற்று மானியக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொண்டு அமர்கிறேன் என கூறியுள்ளார்.
The post இந்து சமய அறநிலையத்துறை 2025-2026 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை மீதான இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பதிலுரை appeared first on Dinakaran.