புதுடெல்லி: வங்கதேசத்தில் இந்து மத தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவாமி லீக்கின் எக்ஸ் பதிவில் ஷேக் ஹசீனா, "சனாதன மத சமூகத்தின் உயர்மட்ட தலைவர் ஒருவர் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். சிட்டகாங்கில் ஒரு கோயில் எரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள், மடங்கள் மற்றும் அகமதியா சமூகத்தினரின் வீடுகள் தாக்கப்பட்டன, சேதப்படுத்தப்பட்டன, சூறையாடப்பட்டன, தீவைக்கப்பட்டன. மத சுதந்திரத்துக்கும், அனைத்து சமூக மக்களின் வாழ்க்கைக்கும், அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும். அது உறுதி செய்யப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.