மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், லெஜண்ட், ஜீனியஸ் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு விதந்தோதப்பட்ட உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த லட்சிய கிரிக்கெட் ஆளுமையான சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதத்தை ஓல்ட் டிராபர்டில் அடித்த நாள் இதுதான். 1990-ம் ஆண்டில் இதே நாளில் (ஆக.14) தனது 17 வயதில் சச்சின் டெண்டுல்கர் தன் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்து இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டு டெஸ்ட் போட்டியை டிரா செய்தார்.
பாகிஸ்தானில் 1989-ம் ஆண்டு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுக இன்னிங்சில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த இன்னிங்சில் வக்கார் யூனிஸ் பவுன்சரில் மூக்கில் அடிப்பட்டு பிளாஸ்திரி போட்டுக் கொண்டு வந்து இரண்டு ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் பவுண்டரிகளை அடித்தவர்.