அமெரிக்காவின் இன்டல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த பாட் கெல்சிங்கர் சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, புதிய சிஇஓ-வாக லிப்-பு டான் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆண்டு சம்பளமாக ரூ.600 கோடி வரை கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில் அடிப்படைச் சம்பளமாக ரூ.8.7 கோடி கிடைக்கும். செயல்பாட்டு ஊக்கத் தொகையாக 200% வழங்கப்படும். நிறுவன பங்குகள் மற்றும் ஊக்கத் தொகை என ரூ.574 கோடி கிடைக்கும்.
செமிகண்டக்டர் மற்றும் மென்பொருள் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் டான். கடந்த 2009 முதல் 2021 வரையில் கேடன்ஸ் டிசைன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவி வகித்துள்ளார். இவரது பதவிக் காலத்தில் அந்நிறுவனத்தின் வருவாய் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதுதவிர, துணிகர முதலீட்டு நிறுவனமான வால்டன் இன்டர்நேஷனல் தலைவராகவும் உள்ளார்.