2024 மக்களவைத் தேர்தலை ஒட்டி ‘இடி முழக்கம்’ போல் உருவானது இண்டியா கூட்டணி. ஆர்ப்பரிப்புடன் உருவான அக்கூட்டணி தேர்தல் முடிவுகள் மூலம் சிறு நம்பிக்கையையும் கடத்தியது. ஆனால், சமீபகால போக்குகள் ‘இண்டியா கூட்டணி இன்னும் இருக்கிறதுதானே?!’ என்ற கேள்வியை எழுப்புகிறது. அந்த சந்தேகத்தின் நிமித்தமாக ஒரு பார்வை…
நெருக்கடியால் உதயமானதா? – கடந்த மக்களவைத் தேர்தல் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்குமா? தொடர்ந்து 3-வது முறை பிரதமராகி மோடி வரலாறு படைப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருந்தன. மறுபுறம், காங்கிரஸுக்கு தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. அதற்கு நிகரான ஒரு நெருக்கடி பல்வேறு மாநிலக் கட்சிகளுக்கும் உருவாகியிருந்தது. காரணம், மத்தியில் இருந்து கொண்டு தன் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு பாஜக கொடுத்துவந்த மறைமுக குடைச்சல்கள். ஐடி, அமலாக்கத் துறை ரெய்டுகள், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், மாநில அரசுகளுடன் ஆளுநர்கள் காட்டிய முரண் என பல்வேறு சிக்கல்களை மாநிலக் கட்சிகள் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மத்தியில் பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒருமித்த இலக்கு அத்தகைய மாநிலக் கட்சிகளுக்கு இருந்தது.