ஒரு விளையாட்டு வீரராக, நாங்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் ரசிகர்களின் பாராட்டுதான் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு தோனி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: “கடந்த பல ஆண்டுகளாக நான் விளையாடி வருகிறேன். இன்னும் எவ்வளவு நாட்கள் விளையாடுவேனோ தெரியாது. ஆனால் ரசிகர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் வியக்கத்தக்கது. ஒரு விளையாட்டு வீரராக, நாங்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் ரசிகர்களின் பாராட்டுதான். கிரிக்கெட்டுக்கு இந்தியா என்பது மிகப்பெரிய மேடையாக இருக்கிறது. நான் சர்வதேச கிரிக்கெட் விளையாடவில்லை. எனவே ஐபிஎல் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. அவர்கள் என் பெயரை சொல்லி அழைக்கிறார்கள், எனக்காக உற்சாகமாக காத்திருக்கிறார்கள், நான் சிறப்பாக ஆட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். நான் அவர்களின் விருப்பமான அணிக்கெதிராக விளையாடினாலும் கூட. இந்த அனுபவம் தான் மிகப்பெரிய மகிழ்ச்சி”