சென்னை: ‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம். மகிழ்ச்சிப் பெருவிழாவாக பொங்கலைக் கொண்டாடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொங்கல் நன்னாள் ஒன்றுதான் நம் பண்பாட்டுத் திருநாள் என்பதை திராவிட இயக்கம் நிலைநாட்டி, மக்களின் திருவிழாவாகக் கொண்டாடச் செய்து வருகிறது. வேளாண் உழைப்பின் விளைச்சலைப் போற்றும் வகையில் புதுப்பானையில் பொங்கலிட்டு, தங்கள் வாழ்க்கையில் விடியல் தந்த சூரியனுக்கு அதைப் படையலிடும் பழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள். இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பில் முன்னணியில் உள்ளது தமிழ்நாடு. பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கிடும் வகையில் சட்டப்பேரவையில் சட்டத்திருத்த முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த அரசு அமைந்த நாள் முதலே பெண்களின் நலனுக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் ஆகியவை தமிழ்நாட்டு பெண்களின் வாழ்வில் புத்தொளி பாய்ச்சிய புரட்சிகரத் திட்டங்களாக, இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றும் திட்டங்களாக இருக்கின்றன. நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல திட்டங்களிலும் பெண் பயனாளிகள் அதிகளவில் உள்ளனர். சமத்துவம் என்பதைச் சொல்லாக இல்லாமல், செயலாக நிறைவேற்றும் திருநாளாம் பொங்கல் நன்னாளைப் பண்பாட்டு திருவிழாவாக கொண்டாடி மகிழும் வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் தலைநகர் சென்னையில் நாட்டுப்புறக் கலைகளை மக்கள் மன்றத்தில் அரங்கேற்றும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025 ஜனவரி 13 முதல் 17 வரை சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. தமிழர்கள் அனைவரும் அவரவர் ஊர்களில் நம் பண்பாட்டுப் பெருமை மிக்க நிகழ்வுகளை நடத்தி மகிழ்ந்திட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் திமுக உடன்பிறப்புகள் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் பகுதி-வட்டக் கிளைகள் வாரியாகத் தமிழர் பெருவிழாவான பொங்கல் திருநாளைக் கொண்டாடி திமுக நிர்வாகிகளுக்கும் மூத்த முன்னோடிகளுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கி வரும் மகிழ்வான செய்திகளை கவனித்து வருகிறேன். உடன்பிறப்புகள் இத்தனை உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் பொங்கலைக் கொண்டாடும்போது, உங்களில் ஒருவனான எனக்குள்ளும் அந்த உத்வேகமும் உற்சாகமும் ஊற்றெடுக்காமல் இருக்குமா?. என்னை ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற வைத்து, அடுத்த வெற்றிக்கும் உறுதியளித்திருக்கும் கொளத்தூர் தொகுதி மக்களுடன் சமத்துவப் பொங்கலைக் கொண்டாடி, திமுக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் பரிசுகளையும் பொங்கல் வாழ்த்துகளையும் வழங்கி மகிழ்ந்தேன். துணை முதலமைச்சர் உதயநிதியும், அமைச்சர் பெருமக்களும், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதிகளில் திமுகவின் சார்பில் பொங்கல் விழாவினை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். திமுகவின் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளைத் தமிழர் பண்பாட்டு விழாவாகக் கொண்டாடுவோம் என்பது முக்கியமானதாகும். பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், இனமானப் பேராசிரியர் என எண்ணற்ற திராவிட இயக்க முன்னோடிகள் தை முதல் நாளின் சிறப்பை முன்னிறுத்தி, பொங்கல் திருநாளைத் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக முன்னெடுத்த பெருமைமிகு வரலாறு நமக்கு உண்டு.
அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, திமுகவின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கலை – இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை அளித்து மக்களை மகிழ்வித்து, மகிழ்ந்திட வேண்டும் என உங்களில் ஒருவனாகக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு, நாள்தோறும் வன்மத்துடன் வதந்திகளைப் பரப்பிட முனையும் அரசியல் எதிரிகள் இவற்றை எதிர்கொண்டபடியே, தெளிவான திட்டங்களுடனும், துணிவான செயல்பாடுகளுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், நிர்வாகத் திறனுடனும் கடமையாற்றும் திராவிட மாடல் அரசின் ஆட்சியில் அன்றாடம் நிறைவேறும் சாதனைகளால், ஏழாவது முறையாக தி.மு.க.வே ஆட்சியில் அமர்ந்திட வேண்டும் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். நம் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். பொதுமக்கள் பங்கேற்புடன் பண்பாட்டுத் திருவிழாவாக, பொங்கல் நன்னாளைக் கொண்டாடுவோம். ‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம். மகிழ்ச்சிப் பெருவிழாவாகப் பொங்கலைக் கொண்டாடுவோம். திமுக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2056 நல்வாழ்த்துகள்! இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
The post ‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என கோலமிட்டு தை மகளை வரவேற்போம், தமிழ் தாயை போற்றிடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து appeared first on Dinakaran.