மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தின் சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் தாதாசாஹிப் பகத். 10-ம் வகுப்பு முடித்த அவர், ஐ.டி.ஐ. படித்துள்ளார். பின்னர் புனே நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ரூ.4 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
சம்பளம் குறைவாக இருந்ததால், இன்போசிஸ் நிறுவனத்தில் ரூ.9 ஆயிரம் கிடைக்கவே உதவியாளராக சேர்ந்தார். கணினிகளில் பணிபுரியும் ஊழியர்களை கவனித்த அவர், இது போன்ற வேலையில் சேர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். 10-ம் வகுப்பு மட்டுமே படித்ததை உணர்ந்த அவர்கள், இந்த வேலைக்கு பட்டப்படிப்பு தேவை என கூறியுள்ளனர். எனினும், கிராபிக் டிசைன், அனிமேஷன் பணிகளுக்கு பட்டப்படிப்பை விட திறமை இருந்தால் போதும் என கூறியுள்ளனர். இதையடுத்து கிராபிக் டிசைன் குறித்து ஓராண்டில் கற்றுக் கொண்டார்.