மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகரும், பிரபல பிக்பாஸ் போட்டியாளரும், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சருமான அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியைச் அடைந்ததுள்ளார். அஜாஸ் கானை இன்ஸ்டாகிராமில் 56 லட்சம் பேர் பின்தொடர்வது கவனிக்கத்தக்கது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்ட அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. தற்போதைய நிலவரபடி 288 தொகுதிகளில் 233-ஐ மகாயுதி கூட்டணியும், 50-ஐ மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் வசப்படுத்துகின்றன.