பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 9 ஆம் தேதி (இன்று) நடைபெறவுள்ளது. இம்ரான் கானுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சனிக்கிழமையன்று என்ன நடக்கும்?
பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அடங்கிய, நாடாளுமன்றத்தின் ஏப்ரல் 3-ம் தேதி அமர்வின் நிகழ்ச்சி நிரல், ஏப்ரல் 9-ம் தேதி அமல்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த வாக்கெடுப்பு மூலம் இம்ரான் கானின் அரசியல் வருங்காலம் தீர்மானிக்கப்படும். சபை அவர் மீது நம்பிக்கை தெரிவித்தால் அவர் பிரதமராக நீடிக்க முடியும், இல்லையெனில் நாட்டின் அடுத்த பிரதமராக மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரை ஆக்குவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு இன்னும் பெரும்பான்மை உள்ளதா?
இம்ரான் கானின் கட்சியான பிடிஐ கட்சிக்கு நாடாளுமன்றத்தில் தற்போதும் பெரும்பான்மை உள்ளது. ஆனால் அக்கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க 172 இடங்கள் தேவை.
2018 தேர்தலில் PTI க்கு மொத்தம் 155 இடங்கள் கிடைத்தன. கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்கப்பட்டது. இப்போது நிலைமை என்னவென்றால், இருபதுக்கும் மேற்பட்ட பிடிஐ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகிவிட்டனர். இம்ரான் அரசில் உள்ள மூன்று பெரிய கூட்டணிக் கட்சிகள், மொத்தம் 17 வாக்குகளைப் பெற்றிருந்தன. அதில் இரண்டு கட்சிகள் எதிர்க்கட்சி கூட்டணிக்கு தங்கள் ஆதரவை அறிவித்து உடன்பாடுகளை எட்டியுள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?
வாக்களிப்பு, பிரதமர் தேர்தலுக்கு நடைபெறுவது போல திறந்த வாக்கெடுப்பு மூலம் நடைபெறும். சபாநாயகர் சபையை இரண்டு கேலரிகளாகப் பிரித்து, தீர்மானத்திற்கு ஆதரவானவர்கள் ஒரு கேலரிக்கும், எதிர்ப்பவர்கள் மற்றொரு கேலரிக்கும் செல்ல வேண்டும் என்று அறிவிப்பார். பதவியில் இருக்கும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சபாநாயகர் அது குறித்து அதிபருக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்.
வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோற்றால் என்ன ஆகும்?
இம்ரான் கான் தனக்கு எதிரான வாக்களிப்பில் தோல்வியுற்றால், அவர் பிரதமராக நீடிக்கமுடியாது. ஆனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருப்பார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) அவரை மீண்டும் சபைத் தலைவர் வேட்பாளராக பரிந்துரைக்க சட்டத்தில் இடமுள்ளது. இம்ரான் கான் தோல்வியடைந்தால், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத்தின் மற்ற வேட்பாளர்களின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறும்.
இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடப்பது ஏன்?
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், பிரதமரின் அதிகாரங்கள் குறைவாகவே இருக்கும். அந்த நிலையில் பிரதமரால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. அவருக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ராஜினாமா செய்வது அல்லது வாக்கெடுப்பை எதிர்கொள்வது.
ஏப்ரல் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, துணை சபாநாயகர் காசிம் சூரி வாக்கெடுப்புக்கு முன்னதாகவே, அரசியலமைப்பின் 5 வது பிரிவை மேற்கோள் காட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்துவிட்டார். அதன் பிறகு பிரதமரின் அதிகாரங்கள் மீட்டெடுக்கப்பட்டன. அதே நேரத்தில் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பிரதமர் இம்ரான் கான், தேசிய தொலைக்காட்சியில் அதிபர் ஆரிஃப் ஆல்வியிடம் பரிந்துரைத்தார்.
அது உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
துணை சபாநாயகரின் தீர்ப்பின் மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்து, பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் துணை சபாநாயகர் அரசியலமைப்பிற்கு விரோதமாக செயல்பட்டதாக ஏப்ரல் 7 வியாழன் அன்று தீர்ப்பளித்தது.
துணை சபாநாயகர், பிரதமர் மற்றும் அதிபரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஆகவேதான் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மீண்டும் நடத்தப்படுகிறது.
இந்த அரசியல் நெருக்கடியில் பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைப்பாடு என்ன?
பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக மற்றும் பொதுமக்கள் தொடர்பு (PR) பிரிவான Inter-Services Public Relations (ISPR), நாட்டில் அரசியல் நெருக்கடியின் தொடக்கத்தில் ராணுவத்திற்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை என்றும், இதில் முற்றிலும் நடுநிலை வகிக்கிறது என்றும் அறிவித்தது.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து துணை சபாநாயகர் தீர்ப்பு வழங்கியபோது, ஏப்ரல் 3 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்ததற்கு ராணுவத்தின் ஒப்புதல் இல்லை என்றும் ராணுவத்திற்கும் நடந்த சம்பவத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்றும் ஐஎஸ்பிஆரின் டைரக்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார் கூறினார்.
நாடாளுமன்றத்தில் தற்போது பெரிய கட்சி எது?
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) க்குப் பிறகு, பி.எம்.எல்-என் , அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கொண்டுள்ளது. இக்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 84 உறுப்பினர்கள் உள்ளனர். மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உள்ள நிலையில் ஷாபாஸ் ஷெரீப், 2018 இல் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது, அவர்கள் ஒருமனதாக ஷாபாஸ் ஷெரீப்பை தங்கள் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினர்.
பாகிஸ்தானில் புதிய பிரதமர் இருப்பாரா அல்லது நாடாளுமன்ற வாக்கெடுப்புக்குப் பிறகு தேர்தல் நடக்குமா?
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்த பிறகு, இம்ரான் கான் பிரதமராக நீடிக்கவில்லை என்றால், புதிய பிரதமருக்கான வேட்பாளர்களின் பெயரை அளிக்குமாறு எல்லா கட்சிகளிடமும் கேட்கப்படும். 24 மணி நேரத்திற்குள் நாடாளுமன்றம் மீண்டும் கூடி புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் திறந்த வாக்கெடுப்பை நடத்தும்.
வாக்குப்பதிவுக்கு முன் இம்ரான் கான் ராஜினாமா செய்யாவிட்டால் மற்றும் பிடிஐ உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தால், வாக்கெடுப்பில் தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக அமராமல், அந்த உறுப்பினர்களின் இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கும், பொதுத் தேர்தல் அல்ல. பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து அடுத்த பிரதமர் மட்டுமே முடிவு செய்ய முடியும்.