சென்னை: இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள உரிமையியல் வழக்குகளில் இறுதி முடிவு காணப்படும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிச.4-ம் தேதியன்று, “சூரியமூர்த்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். அப்போது அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள அனைவரது கருத்துகளையும் கேட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும்,” என உத்தரவிட்டிருந்தது.