ஒன்றிய அரசு கடந்த 2018ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமையும் என அறிவித்தது. தொடர்ந்து, 2019ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் கட்டுமான பணிகள் நடக்கவில்லை என்பது தான் வேதனையின் உச்சக்கட்டம். தமிழக மக்களின் மீது ஒன்றிய அரசு எந்த அளவுக்கு அக்கறையாக இருக்கிறது என்பதற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம். பொய்கள் மூலம் மக்களை திசை திருப்பி விடலாம் என பாஜ தலைவர்கள் எண்ணுகின்றனர். அது ஒரு போதும் தமிழகத்தில் நடக்காது என்பதை அவர்கள் அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.
புதுப்புது திட்டங்கள் அறிவிப்பதோடு கடமை முடிந்து விடுகிறது என ஒன்றிய அரசு எண்ணுகிறது. அறிவித்த திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஒன்றிய அரசு அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக, சுகாதாரத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கடந்த கொரோனா காலத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நடைமுறைக்கு வந்திருந்தால், மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். தமிழகம் வரும் போது மட்டும் தான், ஒன்றிய அமைச்சர்களுக்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஞாபகம் வருகிறது. ஒவ்வொரு முறையும் பாஜ தலைவர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது கிடையாது.
பிற மாநிலங்களில் பொய் பேசி மக்களை ஏமாற்றி வருவது போல், தமிழகத்தில் பொய்கள் மூலம் மக்களை ஏமாற்றும் வேலைகளில் அவர்கள் இறங்கியுள்ளனர். தமிழக மக்கள் மிக தெளிவாக உள்ளனர். அவர்களை ஏமாற்ற முடியாது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றிய அரசு உண்மையான முகம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முக்கியமாக, ஒன்றிய அரசு நினைத்திருந்தால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்து இருக்கலாம். இவ்வளவு காலதாமதம் செய்வது ஏன்? மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கப்போகும் எய்ம்ஸ் மருத்துவமனை விஷயத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடு, மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விஷயத்தில் ஒன்றிய அரசு மவுனமாக இருந்து வருவது ஏன்? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து ஆக்கப்பூர்வமான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். குறிப்பாக, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைப்பதற்கு ஒன்றிய அரசுக்கு விருப்பம் இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் காலதாமதம் ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல. முக்கியமாக, எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றிய அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது. இவர்களின் நாடகத்தை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.
தமிழ் மொழியின் பெருமைகளை புகழ்ந்து பேசுவது, பின்னர் தமிழகத்தில் இந்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சியில் இறங்குவது உள்ளிட்ட வேலைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவது வழக்கம். இதைப்போல், தமிழக மக்களின் மீது பாசம் இருப்பது போல் ஒன்றிய அரசு நாடகமாடி வருகிறது. ஒன்றிய அரசு மற்றும் பாஜ தலைவர்களின் நாடகத்தை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி விஷயத்தில் ஒன்றிய அரசின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனி, அவர்களின் இரட்டை வேடம் தமிழகத்தில் பலிக்காது.