ஈரோடு: இரண்டு நாள் பயணமாக இன்று (டிச.19) ஈரோடு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் அவருக்கு மருந்து பெட்டகத்தை வழங்கி, நலம் விசாரித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்டம்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொள்வதோடு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டப் பணிகள் தொடக்க விழாக்களில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.