இஸ்தான்புல்: ‘இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்ட பிறகே உக்ரைன் அதிபருடன் புடின் பேச வருவார்’ என ரஷ்யா திட்டவட்டமாக கூறியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டாக போர் நீடித்து வரும் நிலையில், முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையே துருக்கியின் இஸ்தான்புல்லில் நேற்று முன்தினம் நேரடி அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முக்கிய முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இருதரப்பிலும் 1000 போர் கைதிகளை பரிமாற்றம் செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது. மற்றபடி, உக்ரைனின் 30 நாள் உடனடி போர் நிறுத்தக் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்தது.
இந்நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் உமெரோவ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் ஜெலன்ஸ்கி-புடின் சந்திப்பாக இருக்க வேண்டும்’’ என்றார். இதற்கும் ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் விடுத்துள்ள அறிக்கையில், ‘இருதரப்பிற்கும் இடையே சில முக்கிய முடிவுகளின் அடிப்படையில் உடன்பாடு எட்டப்பட்ட பிறகே உக்ரைன் அதிபரை புடின் சந்திப்பார்’ என கூறப்பட்டுள்ளது.
புடினுடன் டிரம்ப் நாளை பேசுகிறார்
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தனது சமூக ஊடகப் பதிவில், ‘‘உக்ரைன் போர் தொடர்பாக புடினுடன் திங்கட்கிழமை (நாளை) தொலைபேசியில் பேசுகிறேன். அதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோ உறுப்பு நாடுகளுடன் பேச திட்டமிட்டுள்ளேன். இது ஒரு பயனுள்ள நாளாக இருக்கும் என நம்புகிறேன்’’ என கூறி உள்ளார். புடினுடன் தான் பேசினால் மட்டுமே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என டிரம்ப் அடிக்கடி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
The post இருதரப்பு உடன்பாடு ஏற்பட்ட பிறகே உக்ரைன் அதிபருடன் புடின் பேச வருவார்: ரஷ்யா திட்டவட்டம் appeared first on Dinakaran.