அக்.10, 2025… இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் நாள். அது, ஏற்கெனவே 7 போர்களை நிறுத்தியதாக முழங்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் எழுந்து ஓய்ந்துவிட்டன. இந்நிலையில், ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த முறை கிடைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக சில தரப்பும், அப்படி நடந்தால் அது அந்தப் பரிசுக்கே அவமதிப்பு என்று சிலரும் இப்போது கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு சாத்தியமா? – ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றபோது, இனாமாக இரண்டு சர்வதேச சர்ச்சைகள் அவர் கரங்களில் சேர்ந்தன. ஒன்று காசா போர், இன்னொன்று உக்ரைன் போர். இந்த இரண்டு போர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ட்ரம்ப் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஒருவேளை ஓவர்நைட்டில் இதெல்லாம் சாத்தியமானால் நோபல் பரிசு வழங்கும் கமிட்டிக்கு ட்ரம்ப்பை பரிசீலித்தே ஆக வேண்டிய சூழல் கூட உருவாகலாம். அதெல்லாம் ‘ஹைபாதெட்டிக்கல்’ என்று கடந்து சென்று இன்னும் அலசினால், அடுத்த ஆண்டுக்கான சில சாத்தியக்கூறுகளை பார்க்க இயல்கிறது என்கின்றனர் சில நிபுணர்கள்.