சென்னை: இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் எற்றுக் கொள்ள மாட்டோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்து வருகிறார். அந்த வகையில், மும்மொழிக் கொள்கை குறித்து அனைத்து உறுப்பினர்களும் தங்களது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளனர்.
எடப்பாடி டெல்லி பயணம் குறித்து முதல்வர் பேச்சு
டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி தான் சந்திக்கும் தலைவர்களிடம் மும்மொழி கொள்கை திணிப்பு குறித்து பேச வேண்டும். மும்மொழி கொள்கைக்கு எதிராக பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இருமொழி கொள்கை என்பதுதான் நமது வழிக்கொள்கை, அதுவே நம் விழிக்கொள்கை. இந்தியை ஏற்காவிடில் பணம் தரமாட்டோம் என மிரட்டினாலும் பணமே வேண்டாம் தாய்மொழி காப்போம் என உறுதியுடன் இருப்போம்.
இது பணப் பிரச்சனை அல்ல, நம் இனப் பிரச்சனை”
மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி என்பது பணப் பிரச்சனை அல்ல, நம் இனப்பிரச்சனை. இருமொழி கொள்கைதான் அரை நூற்றாண்டாக தமிழ்நாட்டை வளர்த்து வந்துள்ளது. மாநிலங்களை தங்களின் கொத்தடிமை பகுதிகள் என நினைப்பதால்தான் மொழி திணிப்பை செய்கின்றனர்.
இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெற மாட்டோம்”
நிதி தருவார்கள் என்பதற்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகளல்ல நாங்கள். மக்கள் உன்னதமான உயரத்தை அடைய வழி வகுத்தது இருமொழி கொள்கைதான். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல, இருமொழி கொள்கையே போதும்.
இந்தி மொழி திணிப்பு என்பது பண்பாட்டு அழிப்பு
இந்தி மொழி திணிப்பு என்பது ஒரு மொழி திணிப்பு மட்டுமல்ல; பண்பாட்டு அழிப்பு அதனால்தான் எதிர்க்கிறோம். மொழி கொள்கையில் தமிழ்நாடு வகுத்துள்ள பாதையும் அதன் உறுதியான நிலைப்பாடும் சரியென்று பல மாநிலங்கள் உணர்ந்துள்ளன. மாநில சுயாட்சியை உறுதிசெய்து மாநில உரிமையை நிலைநாட்டினால்தான் தமிழை காக்க முடியும்.
விரைவில் முக்கிய அறிவிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும், தமிழினத்தை உயர்த்த முடியும். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். பணமே வேண்டாம் என தாய் மொழியை காப்போம் என கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்தார்.
The post இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம்; மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் எற்றுக் கொள்ள மாட்டோம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.