கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அடுத்த திம்மக்குடியில் காஸ்ட் ஆப் பிரான்ஸ் கிரியேட்டிவ் சிற்பக்கூடம் உள்ளது. இந்த சிற்ப கூடத்தின் ஸ்தபதி வரதராஜ், பல ஆண்டுகளாக ஐம்பொன் சிலைகள் வடிவமைத்து வருகிறார். சமீபத்தில் ஐம்பொன்னாலான உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலையை வடிவமைத்தார். இந்நிலையில் இலங்கை மட்டக்களப்பில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு ஐம்பொன் சுவாமி சிலைகள் மற்றும் திருவாச்சி உள்ளிட்ட பூஜைப்பொருட்களை வடிவமைத்து தர வேண்டுமென ஸ்தபதி வரதராஜிடம் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதன்படி ஏற்கனவே 1 டன் எடையில் 100 கோபுர கலசங்கள், 4 கோயில் மணிகள் வடிவமைக்கப்பட்டு கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து அந்த கோயிலுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான சிவலிங்கம், நடராஜர், சிவகாமி, வராகி, ராஜமாதங்கி தேவி, சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சி, மீனாட்சி, மாணிக்கவாசகர், கருடன், ஆஞ்சநேயர் உள்பட 28 ஐம்பொன் சிலைகள் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலைகள் 2400 கிலோ எடையில் 2 அடி முதல் 5 அடி வரை அமைக்கப்பட்டது. இலங்கைக்கு ஓரிரு நாளில் கப்பலில் சுவாமி சிலைகள் அனுப்பி வைக்கப்படும் என்று ஸ்தபதி வரதராஜ் தெரிவித்தார்.
The post இலங்கையில் உள்ள கோயிலுக்கு ரூ.30 லட்சம் ஐம்பொன் சிலைகள் சுவாமிமலையில் தயாரிப்பு appeared first on Dinakaran.