கொழும்பு: இலங்கையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், தமிழக மீனவர்கள் பிரச்னை, கச்சத்தீவு குறித்து தலைவர்களிடையே ஆலோசிக்கப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. தாய்லாந்தில் நடந்த ‘பிம்ஸ்டெக்’ எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முயற்சி உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு இலங்கை தலைநகர் கொழும்புக்கு வருகை தந்தார். அவரை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்நிலைக் குழு வரவேற்றது. தலைநகரின் தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் பிரதமர் மோடி தங்கியுள்ளார். அவரை இந்திய வம்சாவளி இலங்கை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இலங்கை அதிபராக அநுர குமார திசாநாயக பதவியேற்ற பிறகு அந்நாட்டுக்கு வருகை தந்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் மோடி என்பதால், அவரது பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் மோடியின் பயணத்தின் போது, இந்தியா – இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, டிஜிட்டல்மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதார பராமரிப்பு, இலங்கைக்கான இந்தியாவின் மறுசீரமைக்கப்பட்ட கடனுதவி ஆகிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இது தவிர மேலும் மூன்று ஒப்பந்தங்களும் கையொப்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது, 450 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியுவியை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியது. இந்நிலையில் பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகவும் இன்று நடத்தும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.
இன்று காலை கொழும்பில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக திருகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5,000 மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் சுமார் 5,000 மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவை இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்தப் பயணத்தின்போது வடகிழக்கு, மலையகத் தமிழர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகின்றனர். நாளை (ஏப். 6) அனுராதபுரத்தில் தனது இலங்கைப் பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் அனுராதபுரத்தில் இருந்து தமிழகத்தின் மண்டபம் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்கிறார்.
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வகையில் அவரது பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக மீனவர்கள் பிரச்னையின் முக்கிய அம்சங்களை இரு தரப்பும் விரிவாக ஆலோசிக்க உள்ளதாகவும், கச்சத்தீவு விவகாரத்தில் பாக் ஜலசந்தி ஆணையம் அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கச்சத்தீவு பற்றி மோடி வருகையின்போது ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை இல்லையென இலங்கை வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கை ஒருபோதும் விட்டுத்தராது எனவும், ஆனால், தூதரக ரீதியில் இருநாடுகளுக்கும் பொதுவான பயன்பாட்டிற்காக இலங்கை ஒருபோதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இலங்கையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; தமிழக மீனவர்கள், கச்சத்தீவு பிரச்னை குறித்த ஆலோசனை? appeared first on Dinakaran.