இலங்கையில் பெரும் வன்முறை வெடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியின் எம்.பி. உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இரவில் பிரதமரின் இல்லத்துக்கு தீவைத்து போராட்டக்காரர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர், பிரதமராக இருக்கும் ராஜபக்ச சகோதரர்கள் பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். தொடர் அழுத்தத்தின் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.
அதுவரை போராட்டம் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றுவந்த நிலையில், பிரதமர் பதவி விலகலுக்கு பிறகு வன்முறை வெடித்தது. கொழும்பு காமுகத்திடலில் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற இடத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் குவிக்கப்பட்டனர். இவர்கள் போராட்டக்காரர்கள் பகுதிக்கு சென்று கையில் கம்பு, தடியுடன் கொடூர தாக்குதல் நடத்தினர்.
இதில் இளைஞர்கள், பெண்கள், பாதிரியார்கள், அரசியல் தலைவர்கள் என 78 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு, ராஜபக்ச ஆதரவாளர்கள் பேருந்துகளில் அழைத்துவரப்பட்டு தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
நிட்டம்புவா நகரில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி கொண்டிருந்தபோது, காரில் வந்த ஆளுங்கட்சி எம்.பி அமரகீர்த்தி துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். பின்னர் அச்சமடைந்த அவர் அருகில் இருந்த கட்டடத்தில் தஞ்சம் அடைந்தார். எனினும் போராட்டக்காரர்கள் நெருங்கி வருவதை உணர்ந்த அவர், கையில் இருந்த துப்பாக்கி மூலம் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால், அங்கு குழப்பமான சூழல் நிலவிய நிலையில், எம்.பி அமரகீர்த்தியின் மெய்க்காப்பாளரின் உடலும் அவ்விடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் தீவிரமானது. கொழும்புவில் உள்ள மகிந்த ராஜபக்ச இல்லத்திற்குள் புகுந்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். குர்னாகலில் உள்ள ராஜபக்சவின் வீட்டிற்கும், மெதமுல்லன பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் பூர்வீக வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சிலரது வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தி, தீ வைப்பு சம்பவங்கள் தொடர்வதால், இலங்கை முழுவதும் பதற்றம் நீடிக்கிறது. அங்கு ஊரடங்கு நாளை காலை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.