கொழும்பு: இலங்கை அனுராதபுரத்தில் 2 ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி புத்த ஆலயத்திலும் வழிபட்டார். இலங்கைக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக சென்ற பிரதமர் மோடி, பயணத்தின் நிறைவு நாளான நேற்று ஆன்மிக நகரமான அனுராதபுரத்திற்கு சென்றார். அவருடன் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகவும் உடன் சென்றார். அனுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மகா போதி கோயிலில் பிரதமர் மோடி வழிபட்டார். அங்குள்ள மகா போதி மரத்தடியில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி, அங்குள்ள புத்த துறவியிடம் ஆசி பெற்றார்.
இக்கோயில் இந்தியா, இலங்கை உறவில் சிறப்பு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் புத்தகயாவில் தோன்றியதாக நம்பப்படும் புனித போதி மரத்தின் மரக்கன்றை கிபி3ம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தியின் மகள் தேரி சங்கமித்தா இலங்கைக்கு கொண்டு வந்து இக்கோயில் பிரகாரத்தில் நட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், அதிபர் திசநாயகவும் ரூ.8 ஆயிரம் கோடியில் புதுப்பிக்கப்பட்ட 128 கிமீ தொலைவிலான மகோ-ஓமந்தை ரயில் பாதையையும், இந்தியாவின் ரூ.130 கோடி நிதி உதவியுடன் மகோவில் இருந்து அனுராதபுரம் வரை அமைக்கப்பட்ட மேம்பட்ட சிக்னல் அமைப்பையும் தொடங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து தனது இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கொழும்பில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். இலங்கை பயணம் குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இலங்கை பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரீக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது நிச்சயம் நமது இருதரப்பு உறவுக்கு வலுவை சேர்க்கும். எனக்கு சிறந்த வரவேற்பு அளித்த அதிபர் திசநாயக, இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறி உள்ளார். அதிபர் திசநாயக அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘பிரதமர் மோடியின் வருகை, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும்’’ என கூறப்பட்டுள்ளது.
* தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
கொழும்புவில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியும், அதிபர் திசநாயகவும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு மீனவர் விவகாரம் குறித்து ஆலோசித்தனர். அப்போது இவ்விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் இந்தியா தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கிணங்க சிறப்பு நடவடிக்கையாக 11 தமிழ்நாடு மீனவர்கள் நேற்று இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
* ராமர் பாலத்தை தரிசிக்கும் பாக்கியம்
இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வரும் வழியில் ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, ‘‘சிறிது நேரத்திற்கு முன்பாக, இலங்கையில் இருந்து திரும்பும் வழியில், ராமர் சேது பாலத்தை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. தெய்வீக செயலாக, அயோத்தியில் சூரிய திலகம் நடக்கும் அதே நேரத்தில் இது நடந்துள்ளது. இதன் மூலம் இரு தரிசனத்தையம் பெற்ற பாக்கியம் கிடைத்துள்ளது. பிரபு ஸ்ரீராம் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்கிறார். அவரது ஆசீர்வாதம் எப்போதும் நமக்கு இருக்கட்டும்’’ என கூறி உள்ளார்.
The post இலங்கை அனுராதபுரத்தில் 2 ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்: புத்த ஆலயத்தில் பிரார்த்தனை appeared first on Dinakaran.