சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் உரிய அனுமதியுடன் இந்திய எல்லைக்குட்பட்ட தனுஷ்கோடி – தலைமன்னாருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, இரண்டு விசைப் படகுகளில் சென்றிருந்த 18 மீனவர்கள் மற்றும் நேற்று அதிகாலை ஒரு விசைப் படகில் சென்றிருந்த 15 மீனவர்கள் என மொத்தம் 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் அராஜகம் கடும் கண்டனத்திற்குரியது. இலங்கை அரசின் இந்த அராஜகத்தை ஒடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உண்டு. இப்பிரச்னைக்கு, நிரந்தரத் தீர்வு காண வேண்டியது மிக அவசியம்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இலங்கை அரசுடன் ராஜதந்திர முறையில் பேசி தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post இலங்கை அரசின் அராஜகத்தை ஒடுக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.