சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும் மற்றொரு சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். ஜன.25ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை (தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்கள்) தனுஷ்கோடி அருகே அவர்களது மீன்பிடி படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே பதற்றத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்துவதோடு அவர்களது எதிர்காலத்தை நிச்சயமற்றதாகவும், இருண்டதாகவும் ஆக்கியுள்ளது. எனவே நமது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.
எனவே, இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும் தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
The post இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.