* ஒன்றிய அரசு மீனவர்களை மீட்க நடவடிக்கை கோரி கோஷம்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால், வாழ்வாதாரம் இழந்து தவிப்பதோடு, குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுவதாக உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற பெண் கதறி அழுதார். ஒன்றிய அரசு மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை கோரி கோஷம் எழுப்பப்பட்டது. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும், உடனடி நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்தும், இரண்டாவது நாளாக நேற்றும் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இதில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள், மீனவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னை குறித்து போராட்ட களத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேசினர். மேலும் தமிழக மீனவர்களின் பிரச்னையை கண்டு கொள்ளாமல் மவுனம் காக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மீனவர்கள் பேசினர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர் ஜெயப்பிரகாசம் மனைவி சுகன்யா பேசுகையில், ‘‘எனது கணவர் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. எனக்கு 3 குழந்தைகள் உள்ளன. 2 பேர் பள்ளியில் படிக்கிறார்கள். கணவரின் உழைப்பை நம்பியே எனது குடும்பம் உள்ளது.
அப்பா எப்போ வருவார்கள் என கேட்டு குழந்தைகள் தினமும் அழுகிறார்கள். கல்வி செலவுக்கு பணம் இல்லாததால் குழந்தைகளின் படிப்பும் பாதிக்கிறது. நாங்கள் முற்றிலும் வாழ்வாதாரத்தையும் இழந்து, குடும்பத் தலைமையையும் பிரிந்து கண்ணீரில் தவிக்கிறோம். இந்திய அரசு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து, எங்களின் துயரத்தை துடைக்க வேண்டும்’’ என கண்ணீர் மல்க கூறினார்.
The post இலங்கை கடற்படை கைது நடவடிக்கையால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு; குழந்தைகளின் கல்வி பாதிப்பு: உண்ணாவிரதத்தில் 3 குழந்தைகளுடன் மீனவ பெண் கதறல் appeared first on Dinakaran.