ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கைது செய்த 14 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, பாம்பனில் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.2 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர்கள் 14 பேரை ஒரு படகுடன் கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து பாம்பனில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை மீட்டுத்தர ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்ச் 9ம் தேதி (நேற்று) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானித்தனர். அதன்படி பாம்பனில் நேற்று விசைப்படகு மீனவர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் 90க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டன. வேலைநிறுத்த போராட்டத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதன் காரணமாக ரூ.2 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து ஏற்கனவே ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்தினர்.
5 நாட்கள் நடந்த இந்த போராட்டம், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, நீண்டகாலமாக மீட்கப்படாமல் இருக்கும் விசைப்படகுகளுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரண நிதியை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தியும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தற்போது நாளொன்றுக்கு வழங்கப்படும் தின உதவித்தொகையையும் ரூ.350ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தியும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதையடுத்து கடந்த 4ம் தேதி வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post இலங்கை சிறைபிடித்த 14 பேரை விடுவிக்கக் கோரி பாம்பன் மீனவர்கள் ஸ்டிரைக்: ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.