சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 6 நாட்டிகல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென இலங்கை கடலோர காவல் படை கப்பல் வந்து, ராமேஸ்வரம் மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் மடக்கிப் பிடித்தனர்.
எல்லை தாண்டி வந்ததாக 15 மீனவர்களை கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதினார். இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க ஒன்றிய அரசு, இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.
இதற்கிடையே இலங்கை நீதிமன்றம், ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும் விடுதலை செய்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தூதரக அதிகாரிகள் தங்கச்சிமடம் மீனவர்கள் 15 பேரையும் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்பு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், சொந்த ஊரான ராமேஸ்வரம் தங்கச்சி மடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
The post இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் சென்னை வந்தனர் appeared first on Dinakaran.