சென்னை: இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை 27.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் அதிகளவில் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், முத்தரப்புப் பேச்சைவார்த்தை நடத்திட ஏற்பாடு செய்யவும், இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக மற்றும் சட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமென்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (27.03.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் 27.03.2025 அன்று, இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினர் கடந்த 3 மாதங்களில், 11 வெவ்வேறு சம்பவங்களில் 147 மீனவர்கள் மற்றும் 19 படகுகளை சிறை பிடித்துள்ளதை தனது கடிதத்தில் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், 2024 டிசம்பர் மாதம் இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, நமது மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் பிரச்சனையை இலங்கை அதிபரிடம் தனிப்பட்ட முறையில் எழுப்பியதாகவும், இந்திய மீனவர்களின் நலனை உறுதியாகக் காப்பதில் ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் தனது 09.02.2025 நாளிட்ட கடிதத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதை தனது கடிதத்தில் முதலமைச்சர் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும். முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும், தூதரக முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு விடுத்த தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், சட்ட உதவிகளை வழங்குமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
The post இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.