புதுடெல்லி: “எந்த வேலையும் செய்யாத மக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்கு அரசுகளிடம் போதுமான பணம் உள்ளது, ஆனால் மாவட்ட நீதித்துறை நீதிபதிகளுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது என்றால் மட்டும் நிதி நெருக்கடி இருப்பதாகக் கூறுவதா?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அகில இந்திய நீதிபதிகள் சங்கம் கடந்த 2015-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வு விசாரணையின்போது, அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, நீதித்துறை அதிகாரிகளின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை முடிவு செய்யும் விஷயத்தில் அரசாங்கம் நிதிக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது என்று தெரிவித்தார்.