மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘சில அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு இலவசத் திட்டங்களை கொண்டு வருவதாக தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்க முடியாமல் திண்டாடுகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களாக இருந்தால், மத்திய அரசு நிதி தரவில்லை என்று எளிதில் பழிபோடுகின்றன. இலவச வாக்குறுதிகளை அளிக்கும் முன் அதற்கான நிதி ஆதாரம் குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி அவர் பேசியிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயணம், மதிய உணவு, காலை உணவுத் திட்டம், இலவச மடிக்கணினி, உயர்கல்வி நிதியுதவி என ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதுபோன்று பல்வேறு மாநில அரசுகளும் இலவசத் திட்டங்களை செயல்படுத்தி அதில் பல திட்டங்கள் மக்களின் பாராட்டைப் பெற்று, பிற மாநிலங்களிலும் பின்பற்றப்படும் அளவுக்கு பிரபலமடைந்து வரும் நிலையில், மத்திய அமைச்சரின் விமர்சனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.