தென்காசி: இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்ஐ மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்.ஐ. சதீஷ்குமார், காவலர் கார்த்திக் ஆகியோர் கடந்த 18ம்தேதி மப்டியில் ஒரு வீட்டிற்குள் புகுந்தனர். அந்த வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் எஸ்.ஐ. தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து போலீசாரை பிடிக்க முயன்றனர். ஆனால் எஸ்.ஐ. சதீஷ்குமார் தான் வந்த பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு காவலர் கார்த்திக் வண்டியில் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய தென்காசி எஸ்பி அரவிந்த், எஸ்.ஐ. சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்தார். மற்றொரு காவலர் கார்த்திக் செங்கோட்டை காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இந்நிலையில் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்த இளம்பெண் எஸ்.ஐ. தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை எண்ணி மனமுடைந்து காணப்பட்டார். கடந்த 23ம்தேதி இரவு பாதிக்கப்பட்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுவரை எஸ்.ஐ. சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில் தற்போது போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே நுழைதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
The post இளம்பெண்ணிடம் தவறாக நடக்கமுயன்ற எஸ்ஐ மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு appeared first on Dinakaran.