உலகம் ஒரு விசித்திரமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. 20-ம் நூற்றாண்டின் நிறைவில் பரவலாக தென்பட்ட, ஆழமாக வேரூன்றும் என்று மூன்றாம் உலக நாடுகள் பெரிதும் நம்பிய ஆரோக்கியமான சூழல், 21-ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில், அநேகமாய் முற்றிலும் அற்றுப் போய்க் கிடக்கிறது. இம்மாதம் 12-ம் தேதி இங்கிலாந்து அரசு, விசா வழங்கல் தொடர்பாக, 82 பக்க வெள்ளை அறிக்கை வெளியிட்டது. வெளிநாட்டினர் வருகையைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இதற்கு 6 நாட்கள் முன்னதாகத்தான் (மே 6) இந்தியா – இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் – புதிய விசா கட்டுப்பாட்டு விதிகள் இடையே நேரடித் தொடர்பு இல்லை. ஆனாலும், ஒன்று மற்றொன்றை பாதிக்கவே செய்யும். வர்த்தக உறவு வேண்டும்; ஆனால் ‘வருகையாளர்' கூடாது என்று கூறக் காரணம்..? ‘தற்காப்புப் பொருளாதாரம்' 2017 ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் முதன்முறையாக் பொறுப்பேற்றவுடன் செய்த முதல் பிரகடனம் – ‘அமெரிக்கா முதலில்'. அதாவது, எங்கள் நாட்டு நலனே முக்கியம்; பிறரின் நலன்களுக்காக நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்கப் போவது இல்லை' என்பதாகும்.