சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் இன்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்கிறார். இதற்கு வேலியன்ட் என பெயரிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை உலகின் சிறந்த இசைக் குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்கிறார்கள். லண்டனில் மாலை 7.30 மணிக்கு இந்நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணியாகும். தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தவர் இளையராஜா. இவர் தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் இசை உலகிற்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் அளித்த ஊக்குவிப்பால் மேற்கத்திய இசை பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் இதுவரை 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். கிட்டதட்ட 15 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
700 படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த நிலையில் இளையராஜா சிம்பொனியை உருவாக்கியுள்ளார். அதற்கு வேலியண்ட் என பெயரிட்டுள்ளார். இதை இன்று லண்டனில் அரங்கேற்றம் செய்கிறார். இதற்காக அவர் கடந்த 6ம் தேதி சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். சிம்பொனி என்றால் என்ன ஒரே நேரத்தில் 4 கவிஞர்கள் 4 வித்தியாசமான கவிதைகளை சொன்னால் நம்மால் ரசிக்க முடியுமா- முடியாது. ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றிணைந்து தரும் இசையை நாம் கொண்டாடலாம். இதுவே சிம்பொனி என இளையாராஜா தெரிவித்துள்ளார். இன்று சிம்பொனியை அரங்கேற்றும் இளையராஜாவின் அது நீண்ட நாள் கனவாக இருந்தது. மேற்கத்திய இசையுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானிய இசையை ஒருங்கிணைத்து 1986 ஆம் ஆண்டு, 1988 ஆகிய ஆண்டுகளில் நீண்ட நேர இசைத் தொகுப்பை அவர் வெளியிட்டிருந்தார்.
2005 ஆம் ஆண்டில் திருவாசகத்தை மேற்கத்திய இசைக் கருவிகளின் இசையோடு வெளியிட்டதை அடுத்து அவர் தொடர்ந்து சிம்பொனியில் ஆர்வம் காட்டி வந்தார். இந்த சிம்பொனியின் சவால் என்ன தெரியுமா- 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களுக்கு இசைக் குறிப்புகளை எழுதிக் கொடுப்பதுதான். இந்தியாவிலிருந்து முதல் முறையாக ஒரு தமிழர் சிம்பொனியை அரங்கேற்றுவது நமக்கு பெருமை தரக் கூடிய விஷயமாகும். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி வரிசையில் இளையராஜாவும் தனது சிம்பொனியை அரங்கேற்றுகிறார்.
கடந்த வாரம் இளையராஜாவின் வீட்டிற்கே சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது சிம்பொனி இசை அரங்கேற்றத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அவரிடம் சிம்பொனி நோட்ஸ்களையும் இளையராஜா காண்பித்து மகிழ்ந்தார். அது போல் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் வாழ்த்து: நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்’ என்று பதிவிட்டுள்ளார்.
The post இளையராஜாவின் சிம்பொனி இசை அரங்கேற்றம்: லண்டனில் இன்று மாலை நடக்கிறது appeared first on Dinakaran.