இஸ்ரேல்-ஈரான் போரையடுத்து இந்தியாவில் எரிபொருள் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஊகங்கள் வெளியான நிலையில் மத்திய அமைச்சர் அதனை மறுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளதாவது: இஸ்ரேல்-ஈரான் போர் மற்றும் அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புவிசார் பதற்றம் அதிகரிப்பு ஆகியவற்றை இந்திய கடந்த இரண்டு வாரங்களாகவே உன்னிப்பாக கவனித்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் வாங்குவது பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அதிக அளவிலான கச்சா எண்ணெய் விநியோகம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறவில்லை. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் வேறுபல வழிகளில் நடைபெறுகிறது. எனவே, உள்நாட்டில் மக்களுக்கு எரிபொருள் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு புரி தெரிவித்துள்ளார்.