“நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்” என்பன போன்ற பஞ்ச் வசனங்களை சினிமாவில் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால், “அதை நான் செய்யலாம். செய்யாமலும் போகலாம். நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது” என்று ஈரான் பிரச்சினையில் அமெரிக்க அதிபர் கூறியிருப்பது ரசிக்கக் கூடிய வசனமும் அல்ல, ஏற்கக் கூடிய வாதமும் அல்ல. ஈரான் பிரச்சினையில் ட்ரம்ப்பின் கணிக்க முடியாத இந்தப் போக்கு அமெரிக்காவுக்கு சாதகமா, பாதகமா என்பதைப் பற்றி சுருக்கமாக அலசுவோம்.
சக்திவாய்ந்த அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வருகின்றன. தற்போது 87 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருக்கிறது என்றும், இதை 90 சதவீதம் செறிவூட்டினால் அணுகுண்டுகளை தயாரிக்க முடியும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.