கெய்ரோ: இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான 6 வார கால போர் நிறுத்தம் இன்று அமலுக்கு வருகிறது. முதல் நாளில் ஹமாஸ் தரப்பில் 3 பெண் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். காசாவில் கடந்த 15 மாதங்களாக நடக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போரால் 46,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். காசாவில் நிவாரண உதவிப் பொருட்கள் கிடைக்காமல் மக்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில், அமெரிக்கா, கத்தார் தலைமையில் இஸ்ரேல், ஹமாசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. முதல்கட்டமாக 6 வார கால போர் நிறுத்தத்திற்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இஸ்ரேல் அமைச்சரவையும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்தம் இன்று காலை 8.30 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு) அமலுக்கு வரும் என கத்தார் வெளியுறவு அமைச்சர் மஜித் அல் அனசாரி நேற்று தகவல் வெளியிட்டுள்ளார். காசாவில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்ளவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் அறிவுறுத்தி உள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 6 வாரத்தில் ஹமாஸ் தன்னிடமுள்ள 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளில் 33 பேரை விடுவிக்கும். முதல் நாளான இன்று 3 பெண் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். 7வது நாளில் 4 பேரும் அடுத்த 5 வாரங்களில் 26 பேரும் என படிப்படியாக பணயக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். அதற்கு ஈடாக இஸ்ரேல் தனது நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 700 பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதாக அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் பெண்கள், இளைஞர்கள்.
இதற்கான பட்டியலையும் இஸ்ரேல் நீதித்துறை வெளியிட்டுள்ளது. இதில் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஹமாஸ் போராளிகளும் இடம்பெற்றுள்ளனர். ஆனாலும் இன்று மாலை 4 மணிக்கு முன்பாக எந்த கைதிகளும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. 15 மாதமாக நீடித்த போரால் அனைத்தையும் இழந்த காசா மக்களுக்கு 6 வார கால போர் நிறுத்தம் பெரும் நிம்மதியை தந்துள்ளது. இதில் பலரும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க எகிப்தை ஒட்டிய ரபா எல்லையில் நூற்றுக்கணக்கான லாரிகள் காத்திருக்கின்றன.
இந்த போர் நிறுத்த ஒப்பந்த காலத்திலேயே 2வது மற்றும் 3ம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். இதில் காசாவிலிருந்து முழுமையாக இஸ்ரேல் படைகள் வெளியேறினால் மட்டுமே மீதமுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க முடியும் என ஹமாஸ் கூறி உள்ளது. அதைப் பற்றியும் முழுமையாக போரை முடிவுக்கு கொண்டு வந்து காசாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடத்துவது குறித்தும் அடுத்த கட்டமாக பேசப்பட உள்ளது. இதன் மூலம் காசா போர் முடிவடையும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் இன்று அமலாகிறது: முதல் நாளில் 3 பெண் பணயக் கைதிகள் விடுவிப்பு appeared first on Dinakaran.