புதுடெல்லி: ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள், ரஷ்யாவில் காணாமால் போன 16 இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமரின் அமெரிக்கப் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், "பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் உரையாடினர். இந்தியா -அமெரிக்கா இடையேயான விரிவான சர்வதேச கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்காக பிரதமரின் அமெரிக்க வருகையை முன்கூட்டியே மேற்கொள்வதற்காக இரு தரப்பினரும் பணியாற்றி வருகின்றனர். இந்த பயணத்துக்கான தேதிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.